செய்திகள்
மாதிரிப் படம்

காஷ்மீர் தொடர் போராட்டம் : இந்திய ரெயில்வே நிறுவனத்திற்கு ரூ.2 கோடி இழப்பு

Published On 2019-10-03 12:20 GMT   |   Update On 2019-10-03 12:20 GMT
ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் தொடர் போராட்டம் காரணமாக ரெயில்வே நிறுவனத்திற்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதை எதிர்த்தும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக இரு மாதங்களாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பள்ளிகள், போக்குவரத்து துறைகள் போன்றவை சரியாக இயங்காமல் முடங்கியுள்ளன. 

இந்நிலையில், தொடர் போராட்டங்கள் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ரெயில்வே துறைக்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், காஷ்மீரில் ரெயில் சேவை மிகவும் பிரபலமானது.  போராட்டம் நடந்த இரு மாதங்களும் ரெயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு காரணங்கள் கருதி ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. 

குறிப்பாக, மேற்கு பகுதியிலிருக்கும் பாரமுல்லா நகரிலிருந்து தலைநகர் ஸ்ரீநகர் வழியாக ஜம்முவில் உள்ள பனிஹால் நகருக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் போராட்டங்களின் போது, ரெயில் பெட்டிகள் மற்றும் சில தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன்மூலம் ரெயில்வே துறைக்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News