செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் வேண்டும்- மத்திய சுகாதார மந்திரிக்கு அன்புமணி கடிதம்

Published On 2021-10-11 07:58 GMT   |   Update On 2021-10-11 07:58 GMT
புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களை பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டாவியாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களை தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ல் கீழ்க்கண்ட திருத்தங்களை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

* உணவகங்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கென தனி பகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் மூலம், அந்த இடங்களில் புகைப்பிடிக்க 2003ஆம் ஆண்டின் சட்டம் அனுமதிக்கிறது. இந்தப் பிரிவு அகற்றப்பட வேண்டும்.

* புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களை பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

* 2003-ம் ஆண்டின் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி, கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பனையும், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையும் அனுமதிக்கப்படவில்லை. அதனால், அவை இரண்டும் தடை செய்யப்பட வேண்டும்.


*2003-ம் ஆண்டின் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் என்பது, அத்தகைய செயல்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும் அளவுக்கு இல்லை. இந்தக் குறைபாடு புதிய சட்டத்திருத்தத்தில் போக்கப்பட வேண்டும்.

* புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ வயது 18லிருந்து 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

* கிரிக்கெட் போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பின் போது சிகரெட், பீடி மற்றும் புகையில்லாத புகையிலைப் பொருட்கள் மறைமுக விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020-ஐ வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இந்தச் சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளும் களையப்பட வேண்டும்.

எனவே, பொது சுகாதாரத்தின் நலன் கருதி, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020-ஐ வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நான் முன்வைத்துள்ள திருத்தங்களுடன் தாக்கல் செய்யவேண்டும். அதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களையும், பொது மக்களையும் கொடிய புகையிலைப் பொருட்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tags:    

Similar News