ஆன்மிகம்
சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-12-11 08:50 GMT   |   Update On 2020-12-11 08:50 GMT
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதைதொடர்ந்து திருவிழா 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி தேரோட்டமும், 30-ந்தேதி ஆருத்ரா தரிசனமும் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தால் திருவிழாவை எப்படி நடத்துவது என கோவில் நிர்வாகம் திணறி வந்தது.

இதுபற்றி ஊர் பொதுமக்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததோடு திருவிழாவை நடத்த அனுமதி பெற்று தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், அனைத்து கட்சிகள், இந்து இயக்கத்தினர் சார்பிலும் பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர், மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில் தற்போது கொரோனா ஊரடங்கில் அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சுசீந்திரம் கோவிலில் மார்கழி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரின் கோரிக்கைபடி மாவட்ட நிர்வாகம் பாரம்பரிய முறைப்படி கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

திருவிழாவையொட்டி வருகிற 20-ந்தேதி மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்திரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முதல்நாளான 21-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 9 மணிக்கு தாணுமாலய சாமியின் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் நடக்கிறது.

22-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூசிக வாகனத்தில் வீதிஉலா வருதல், காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வருதல், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

23-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு சாமி வீதி உலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.25-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சி, மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

27-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி வீதி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 29-ந்தேதி காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 30-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு ஆறாட்டு ஆகியவை நடக்கிறது

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், ஜெயச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News