செய்திகள்
கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை நோய் அதிகரிப்பு- சேலம், நாமக்கல்லில் 91 பேர் பாதிப்பு

Published On 2021-06-03 10:11 GMT   |   Update On 2021-06-03 10:11 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 17 நாட்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 67 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 53 பேரும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 14 பேரும் அடங்குவர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கென சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் தற்போது 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3 பேருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.
Tags:    

Similar News