சிறப்புக் கட்டுரைகள்
டாக்டர் சவுந்தரராஜன்

அறிவோம் சிறுநீரகம்: குடிக்கும் தண்ணீரும் எமனாகும்... டாக்டர் சவுந்தரராஜன்- 15

Published On 2022-05-06 11:11 GMT   |   Update On 2022-05-06 11:11 GMT
சிறுநீரகம் செயலிழந்து போனவர்கள் யாரும் புரதமே சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் தான் காலம் காலமாக இருந்து வந்தது.


டயாலிசிஸ் வரை வந்து விட்டோம். இந்த நிலையை அடைந்தால் சரியாக சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது என்ற எண்ணம் எழுவது இயல்புதான். ஒரு வகையில் அது உண்மையும் கூட.

ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட உடனேயே டயாலிசிஸ் தேவைப்படுவது கிடையாது.

நிரந்தர சிறுநீரக செயலிழப்பின் இறுதி கட்டத்துக்கு முந்தைய நான்காவது நிலையில் சிலருக்கு டயாலிசிஸ் தேவைப்படலாம். பலருக்கு மருத்துவ சிகிச்சையிலேயே சீர்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஐந்தாவது கட்டத்தை அடைந்தால் மட்டுமே டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பதெல்லாம் தேவைப்படும்.

ஐந்தாவது கட்டத்துக்கு செல்லக்கூடியவர்கள் 10 சதவீதம் பேர்தான். எனவே சிறுநீரக கோளாறு வருகிறவர்கள் அனைவரும் பயப்பட தேவையில்லை.

முதல் 3 நிலைகளில் இருப்பவர்கள் வேளாவேளைக்கு தவறாமல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சாப்பிட வேண்டும். சுகர், பிரஷருக்கு சாப்பிடுவதைப் போல் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள் அவை. அதோடு உணவு கட்டுப்பாடும் அவசியம்.

பொட்டாசியமும், அதிக புரதமும் இவர்களுக்கு எதிரிகள். சாதாரணமானவர்களுக்கு ஊட்டச்சத்து தரும் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழை போன்ற பழங்கள், இளநீர் ஆகியவற்றை சாப்பிட கூடாது. காய்கறிகள், கீரை ஆகியவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் இவைகளில் பொட்டாசியம் சத்து அதிகம். ஐந்தாவது கட்டத்தில் இருப்பவர்கள் பொட்டாசியம் சத்து நிறைந்த உணவு வகைகளை தொடவே கூடாது. பொட்டாசியம் மட்டுமல்ல. அதிகமான புரதமும் இவர்களுக்கு ஆகாது. அதே நேரம் முற்றிலுமாக புரதம் கிடைக்காமலும் இருக்கக்கூடாது. சில நோயாளிகளை புரதம் எடுத்துக் கொள்ள சொல்வோம். சிலருக்கு வேண்டாம் என்போம். அது உடல்நிலையை பொறுத்தது.

சிறுநீரகம் செயலிழந்து போனவர்கள் யாரும் புரதமே சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் தான் காலம் காலமாக இருந்து வந்தது.

அதே நேரம் புரதமே எடுத்துக் கொள்ளா விட்டாலும் பிரச்சினை வரும் என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே சைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதங்கள் உணவாக உள்ளே போகும் போது உடலுக்கு பயன்பட்டது போக யூரியாவாக வெளிவரும் கழிவுதான் வெளியேற முடியாமல் ரத்தத்தில் யூரியாவின் அளவு உயருகிறது.

அன்றாட தேவைக்கு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்ப புரதம் தேவைப்படுகிறது. உதாரணமாக 60 கிலோ எடை உடையவருக்கு 60 கிராம் புரதம் தேவை.

சிறுநீரகம் ஆரம்ப நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு புரத கட்டுப்பாடு தேவை.1 கிலோவுக்கு 6 கிராம், 3 மற்றும் 4வது நிலையில் இருப்பவர்களுக்கு 3 கிராம். என்று பரிந்துரைப்போம். டயாலிசிஸ் சென்ற பிறகு புரத கட்டுபாடு தேவையில்லை. அவர்கள் சாதாரணமாக சாப்பிடுவதைப் போல் கிலோவுக்கு 1 கிராம் புரோட்டீன் சாப்பிட வேண்டும்.

முதல் 3 நிலைகளில் இருப்பவர்கள் அதிக புரதம் நிறைந்த மாமிசம், முட்டை போன்றவற்றை அளவுக்கு மீறி சாப்பிட கூடாது. அதே நேரம் சிறு வயது குழந்தைக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டாலும் குழந்தை வளர புரத சத்து தேவைப்படும். எனவே தேவையான அளவு புரதம் கொடுக்க சொல்வோம்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு எவ்வளவு புரதம் சேர்க்க வேண்டும் என்பது சிறு நீரக செயலிழப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சிறுநீரில் எவ்வளவு புரதம் வெளியேறுகிறது என்பதையும் பொறுத்து மாறுபடும். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் வரைதான் இந்த புரதகட்டுப்பாடுகள். டயாலிசிஸ் நிலைக்கு சென்று விட்டால் புரதம் நிறைய சாப்பிட வேண்டி வரும்.

உணவு விஷயத்திலும் கொழுப்பு முக்கிய பிரச்சினை. கொழுப்பு இதயத்துக்கும், சிறுநீரகத்துக்கும் பொது எதிரி.

உணவில் கொழுப்பு கட்டுப்பாடு இல்லாமல் போவதால் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். அதே போல் நெப்ரான்களுக்கு இடையே இருக்கிற ரத்த ஓட்டத்தை குறைப்பதால் நெப்ரான்களும் பாதிக்கப்படுகின்றன.

பொட்டாசியம், உப்பு, புரதம், கொழுப்பு கட்டுப்பாடு மட்டுமல்ல. தண்ணீர் கடுப்பாடும் அவசியம்.

சிறுநீரகம் செயலிழந்து போனால் தண்ணீர் கூட நோயாளிகளுக்கு விரோதியாக மாறி விடும். அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்து. தேவையை விட குறைவாக குடித்தாலும் பிரச்சினை வரும்.

நான் சிகிச்சை அளித்து வந்த டயாலிசிஸ் நோயாளி ஒருவருக்கு மிகக் குறைவாகத்தான் தண்ணீர் கொடுப்போம். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருந்தார். நிறையத் தண்ணீர் குடித்ததால் ஏற்படுகிற அறிகுறிகள் ஏற்பட்டன. தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டி வந்தது. எங்களுக்கே இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஒரு சிஸ்டர்தான் அந்த நோயாளி என்ன செய்தார் என்பதைக் கண்டுபிடித்தார்.

ஒவ்வொரு முறை பாத்ரூம் போய்விட்டு வரும்போதும் வேகவேகமாக அங்கேயிருக்கிற வாஷ் பேசின் குழாயைத் திறந்து தண்ணீரைக் குடித்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார். தண்ணீரைக் குடித்தால் தான் இறந்து போகவும் நேரலாம் என்று தெரிந்தும் அவர் குடித்தார் என்றால்... எவ்வளவு தாகம் எடுக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆனாலும் ஒரு அளவுக்கு மேல் அவர்கள் தண்ணீர் குடிக்கக்கூடாது. குடித்தால், அது வெளியேறும் வழி தெரியாமல் உடல் முழுக்க சோர்ந்துபோகும். நுரையீரலிலும் தண்ணீர் சேர்வதால்தான் மூச்சு திணறல் ஏற்படுகிறது. “நீங்கள் எவ்வளவு சிறுநீர் கழிக்கிறீர்களோ அவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேண்டும்” என்று நாங்கள் அவர்களிடம் சொல்வோம்.

இதே நோயாளிகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினை இருந்தால் கொழுப்பு சேர்க்கவே கூடாது என்பார் இதய மருத்துவர். சர்க்கரை இருந்தால் கார்போ ஹைட்ரேட் சேர்க்கக் கூடாது என்பார் அந்த மருத்துவர். நான் புரதமும் உப்பும் சேர்க்கக்கூடாது என்பேன், “அப்படியெனில் நான் என்னதான் சாப்பிடுவது டாக்டர்?” என்று கேட்பார்கள்.

சி.கே.டி. (நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு) நோயாளிகளுக்குத் தனித் தனியே அவரவர் சிறுநீரகத்தின் மற்றும் இதர நோய்கள் பற்றிய நிலையை வைத்து தேவையான உணவு முறைகள் அறிவுறுத்தப்படும்.

சி.கே.டி. நோயாளிகள் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தாலும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியிருந்தாலும் உணவு, தண்ணீர், உப்பு விஷயத்தில் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்றுவதுதான்... பின்பற்றுவது என்றால் வெறும் பேச்சுக்கல்ல... மிகச் சரியாக அதைச் செய்வதுதான் சிறந்த சிகிச்சை.

உயர் ரத்த அழுத்தத்தை சிறுநீரகம்தான் உருவாக்கும்

உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் உறுப்பு சிறுநீரகம் தான். இந்த உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புதான் இதயம், மூளை மற்றும் ரத்த நாளங்களில் உணரப்படுகிறது.

ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பதால் தானே ரத்த அழுத்தம் ஏற்படும் என்ற சந்தேகம் எழலாம். அது நியாயம்தான். அந்த அடைப்பில் 20 சதவீதத்தை கொழுப்பு ஏற்படுத்தினால் 80 சதவீதத்தை சிறுநீரகத்தில் அதிகமாக சுரக்கும் ‘ரெனின் ஆஞ்சியோ டென்சின்’ தான் ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தில் 2 வகை உண்டு. முதலாவது அயே(ர்)டாவில் இருந்து சிறுநீரகத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்கிற ரத்த நாளம் சுருங்குவதால் அல்லது அடைபடுவதால் வரக்கூடிய ரத்த அழுத்தம். இரண்டாவது சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் பழுதாகி, சோடியத்தை வெளியேற்ற முடியாமல், கால்ஷியமும் சோடியமும் ரத்த நாளத்தின் சுவரில் தங்குவதால், சுவர் சுருங்கி விரியும் குணத்தை இழந்து கடினத்தன்மையாவதால் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம்.

சிறுநீரகத்தால் சோடியத்தை வெளியேற்ற முடியாததால்தான் உயர் ரத்த அழுத்தக்காரர்களுக்கு உப்பைக் குறைக்கச் சொல்கிறோம். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உணவில் அதிக உப்பு உபயோகிக்கிறவர்கள் நாம்தான்.

உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு உப்பைக் குறைக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இனி வரும் காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முடியும். நூற்றில் எண்பது சதவிகிதத்தினருக்கு பரம்பரையாக தாத்தா, அப்பாவிடமிருந்து வருகிறது. இது பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் வரும். நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருவதற்கு செகண்டரி ஹைபர் டென்ஷன் என்று பெயர். இந்த வயதில் ரத்த அழுத்தம் வந்து அதை உடனடியாக கவனித்தால் குணமாக்கி விடலாம். வயது முதிர்ந்த பிறகு வருகிற பி.பி.யை குணமாக்க முடியாது. கட்டுக்குள் வைக்கலாம்.

Tags:    

Similar News