செய்திகள்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

விவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Published On 2021-01-25 17:56 GMT   |   Update On 2021-01-25 17:56 GMT
கொரோனா காலத்தில் சிறப்பான பணியினை ஆற்றிய விவசாயிகள், ராணுவத்தினர், விஞ்ஞானிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பலருக்கும் நன்றியினை தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு தின உரையாற்றியுள்ளார்.
72-வது குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நமது வாழ்க்கைத் தத்துவத்தின் நிரந்தரமான சித்தாந்தங்கள். இந்தக் கோட்பாடுகள் சுட்டும் பாதையில், நமது வளர்ச்சிப் பயணம் நிரந்தரமாக முன்னேற்றம் காண வேண்டும்.

தீவிரமான இயற்கைச் சூழல்களையும், அநேக சவால்களையும், கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றையும் தாண்டி நமது விவசாய சகோதர சகோதரிகள், வேளாண் உற்பத்தியில் எந்தக் குறைவையும் ஏற்பட விடவில்லை. நன்றியுடைய நமது தேசம், நமது அன்னமளிக்கும் விவசாயிகளின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றது. 

இரவு பகலாக பாடுபட்டு, மிகக் குறைந்த சமயத்திலேயே தடுப்பூசியை மேம்படுத்தியதன் வாயிலாக, நமது விஞ்ஞானிகள் மனித சமுகமனைத்தின் நலனுக்காக புதியதொரு வரலாற்றினைப் படைத்திருக்கின்றார்கள். நாட்டிலே இந்த பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும், வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இறப்புவீதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – நிர்வாகம் – இன்னும் பிறரோடு இணைந்து ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்திருக்கின்றார்கள்.  இந்த வகையில், நமது அனைத்து விவசாயிகள், இராணுவத்தினர், விஞ்ஞானிகள் ஆகியோர், சிறப்பான பாராட்டுதல்களுக்கு உரித்தானவர்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க, தங்களின் உயிர்களையும்கூட பொருட்படுத்தாமல், பல இடர்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன். இவர்களில் சிலர் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள்.

நான் மீண்டும் ஒருமுறை குடியரசுத் திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags:    

Similar News