ஆன்மிகம்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல் வைத்து பூஜை

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல் வைத்து பூஜை

Published On 2021-10-07 04:11 GMT   |   Update On 2021-10-07 04:11 GMT
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலானது கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூ போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் வேறு ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கொங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கே.எம்.மணிசிவராம் (வயது 47) என்ற பக்தரின் கனவில் உத்தரவான நிறைபடி நெல் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் செப் 2-ந் தேதி முதல் வில், அம்பு ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது நிறைப்படி நெல் வைத்து பூஜிக்கப்படுவதால் நாடு முழுவதும் மழை பொழிவு அதிகரித்து, நெல் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். எனினும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

உத்தரவு பொருளை கொண்டு வந்து வைத்த பக்தர் கே.எம்.மணிசிவராம் கூறியதாவது:-

நான் பல முறை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். சிவன்மலை சுப்பிரமணிய சாமி என்னுடைய கனவில் தோன்றி பலமுறை உணர்த்தியுள்ளார். இதுவரை நான் பசும்பால், உப்பு, அச்சு வெல்லம், பூ மாலை, இரும்பு சங்கிலி, மக்காச்சோளம் ஆகிய உத்தரவு பொருட்கள் என் கனவில் உத்தரவாகி பின்னர் இங்கு வந்து சாமியிடம் பூ கேட்டு உத்தரவு பொருள் வைக்கப்பட்டது.

தற்போது நான் 7-வது முறையாக உத்தரவு பொருளான நிறைபடி நெல் கொண்டு வந்து சாமியிடம் பூ போட்டு கேட்டு உத்தரவு பெட்டியில் வைத்துள்ளேன். சென்ற முறை மக்காச்சோளம் கொண்டு வந்து வைத்தேன். மக்காச்சோளத்தின் விலை ஏறியது. அதுபோலவே நெல்லின் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். விலை ஏற்றத்திற்கு வாய்ப்புள்ளது. மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும். எல்லோரும் நலமுடன் வாழ்வார்கள்.

இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

Similar News