செய்திகள்
முல்லை பெரியாறு அணை

142 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2021-11-23 04:56 GMT   |   Update On 2021-11-23 04:56 GMT
பெரியாறு அணை நீர் பிடிப்பில் மழை குறைந்து வருவதாலும், கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:

கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 141 அடியை கடந்தது. தற்போது மழை சற்று குறைந்திருந்த போதிலும் பெரியாறு, தேக்கடி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1862 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் மின் உற்பத்திக்கு மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 29-ந்தேதி கேரள பகுதிக்கு 5 ‌ஷட்டர்கள் மூலம் 2950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை குறைந்ததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நீர் மட்டம் கடந்த 19-ந் தேதி அதிகரித்தபோது 2 ‌ஷட்டர்கள் மூலம் 781 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை முற்றிலும் நின்றதால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகத்தின் குடிநீர் மற்றும் சாகுபடிக்காக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் ஓரிரு நாளில் 142 அடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 7491 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டக்கோரி கடந்த சில நாட்களாக கேரளாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்கள், தர்ணா, மனித சங்கிலி போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் நீர்பாசனத்துறை அமைச்சரும் கொல்லம் எம்.பி.யுமான பிரேம சந்திரன், இடுக்கி எம்.பி. டீன் சூரிய கோஸ் ஆகியோர் தலைமையில் புதிய அணை கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்குமாறு கேரள அரசிடம் அனுமதி கேட்டனர்.

ஆனால் தற்போதைய சூழலில் அங்கு செல்ல அனுமதி தர முடியாது என கேரள அரசு தெரிவித்தது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags:    

Similar News