செய்திகள்
மீட்பு

கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு

Published On 2020-10-14 10:11 GMT   |   Update On 2020-10-14 10:11 GMT
திருவாரூரில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட 4 சிறுவர்களை சைல்டுலைன் அதிகாரிகள் மீட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் நகர் தர்மகோவில் தெருவில் இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிந்து வருவதாக சைல்டுலைன் 1098-க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் திருவாரூர் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், குழந்தை பாதுகாப்பு துறை புறதொடர்பு பணியாளர் சாந்தி மற்றும் டவுன் போலீசார் கொண்ட குழுவினர் இறைச்சி கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் அன்புவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்லடம் புரோக்கர் மணி என்பவர் 4 சிறுவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் பெற்று கொண்டு வேலைக்கு விட்டு சென்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News