செய்திகள்
மதுரை ஐகோர்ட்

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் கருத்து

Published On 2020-12-01 01:09 GMT   |   Update On 2020-12-01 01:09 GMT
முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பல்லூர் பகுதியை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் அரசுப்பள்ளி ஆசிரியராகவும், அவரது மகன் அரசு டாக்டராகவும் பணியாற்றியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றது சட்டவிரோதம். எனவே மனுதாரர், அவரது மகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் அரசு ஊழியர், இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை சமூக விரோத செயலாக இந்த கோர்ட்டு பார்க்கிறது. முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் முறைகேடாக சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும். அரசு ஊழியர் ஒருவருக்கு 5 பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தாசில்தார் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். இது கண்துடைப்பு நடவடிக்கை. இதை இந்த கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது.

எனவே லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றனர். மேலும், அந்த தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள், சொத்து விவரங்களையும் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

அரசு ஆசிரியர் தன் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் ஜாதி சார்ந்த சங்கங்களும், மதம் சார்ந்த சங்கங்களும் வைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மனுதாரர் மற்றும் மனுதாரருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும், இவர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு நகலையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News