உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பணி நிரந்தர அரசாணையை எதிர்பார்க்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள்

Published On 2022-01-11 08:42 GMT   |   Update On 2022-01-11 08:42 GMT
தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து, அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை கோரி வருகின்றனர்
புதுக்கோட்டை:

தமிழக அரசு பள்ளிகளில் 2012&ம் ஆண்டு 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய எட்டு துறைகளில் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டார்கள். 

பின்னர் அவர்களுக்கு சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த ஆசிரியர் தரப்பில் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது: 

2022&ம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி, ஜனவரி 5 ஆம் தேதி முதல் நடந்த சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில் சொல்லும்போது, தேர்தல் அறிக்கையின்படி பணி நிரந்தரம் செய்வோம் என உறுதி செய்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தார். எனவே முதல்வர்,  தமிழக அரசின் கொள்கை முடிவாக 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களது வாழ்க்கையில் விடியல் கிடைக்க வேண்டுகிறோம் என்றார்.
Tags:    

Similar News