இந்தியா
புதிய பாராளுமன்றத்தின் வரைபடம்

புதிய பாராளுமன்ற கட்டுமான செலவு ரூ.1,250 கோடியாக உயர்வு

Published On 2022-01-21 09:38 GMT   |   Update On 2022-01-21 09:38 GMT
கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.282 கோடி அதாவது, ரூ.1,250 கோடி வரை செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது. அப்போது ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றத்தை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாகிறது. இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் சமயத்தில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமானப்பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.282 கோடி அதாவது, ரூ.1,250 கோடி வரை செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.

திட்டமிட்டதைவிட 29 சதவீதம் செலவு உயர்ந்துள்ளது. புதிய பாராளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வசதி உள்ளது. ஒரேநேரத்தில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் புதிய பாராளுமன்றத்தில் அமர முடியும்.

Tags:    

Similar News