செய்திகள்
கோப்புப்படம்

8 மாவட்டங்களில் 200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Published On 2021-06-12 06:26 GMT   |   Update On 2021-06-12 06:26 GMT
கொரோனா பாதிப்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையை பின்னுக்குதள்ளி கோவை முதல் இடத்தை பிடித்தது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த மே மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184 ஆக பதிவானது. சென்னையிலும் கடந்த மாதம் கொரோனா தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதம் 12-ந் தேதி சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 7 ஆயிரத்து 564 ஆக பதிவானது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்து வந்தது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன் பிறகும் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த 11 மாவட்டங்களிலும் ஊரடங்கில் குறைவான தளர்வுகளே அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கொரோனா தொற்றை குறைக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் 21-ந் தேதி தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184 ஆக பதிவான நிலையில் நேற்று தினசரி பாதிப்பு 15 ஆயிரத்து 759 ஆக குறைந்தது.

தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த 21 நாட்களில் 20 ஆயிரத்து 425 குறைந்துள்ளது.


சென்னையில் கடந்த மாதம் 12-ந் தேதி தினசரி பாதிப்பு 7 ஆயிரத்து 564 ஆக பதிவான நிலையில் நேற்று அது 1,094 ஆக சரிந்தது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6,470 அளவுக்கு குறைந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் நேற்றைய தினசரி தொற்று எண்ணிக்கையின்படி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பாதிப்பு 200-க்கு கீழே குறைந்தது.

பெரம்பலூரில் மிகவும் குறைவாக பாதிப்பு எண்ணிக்கை 96 ஆக பதிவானது. அரியலூரில் 105 பேரும், கரூரில் 158 பேரும், புதுக்கோட்டையில் 159 பேரும், ராமநாதபுரத்தில் 125 பேரும், சிவகங்கையில் 117 பேரும், தென்காசியில் 198 பேரும், திருப்பத்தூரில் 176 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

கொரோனா பாதிப்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையை பின்னுக்குதள்ளி கோவை முதல் இடத்தை பிடித்தது. கடந்த மே மாதம் 27-ந் தேதி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 2,779 ஆக இருந்த நிலையில், கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதன் பிறகு கடந்த 6-ந் தேதி ஈரோடு மாவட்டம் தினசரி பாதிப்பில் கோவைக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை பிடித்தது. அன்று பாதிப்பு எண்ணிக்கை 1,694 ஆக பதிவானது. தற்போது வரை தினசரி பாதிப்பில் கோவை முதல் இடத்திலும், ஈரோடு 2-வது இடத்திலும், சென்னை 3-வது இடத்திலும் உள்ளது.

கோவையில் நேற்று தினசரி பாதிப்பு 2,056 ஆகவும், ஈரோட்டில் 1,365 ஆகவும் பதிவானது. ஆனாலும் கடந்த 2 வாரமாக கோவையிலும், ஈரோட்டிலும் பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் கள்ளக்குறிச்சியை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் தொற்று விகிதம் மிகவும் மெதுவாக குறைகிறது. அங்கு நேற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 243 ஆக பதிவானது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 343 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்னும் 1 லட் சத்து 74 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் 18 ஆயிரத்து 600 பேரும், திருப்பூரில் 17 ஆயிரத்து 498 பேரும், ஈரோட்டில் 12 ஆயிரத்து 520 பேரும், சென்னையில் 10 ஆயிரத்து 842 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் 378 பேர் இறந்தனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 906 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சதவீதமும் குறைந்து வருகிறது. தினமும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாவதால் பரவல் சதவீதமும் குறைந்துள்ளது. நேற்று 1 லட்சத்து 72 ஆயிரத்து 838 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. இருப்பினும் சோதனை நேர்மறை விகிதம் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருகிறது.

கடந்த 1-ந் தேதி சோதனை நேர்மறை விகிதம் 38 சதவீதம் முதல் 9.4 சதவீதம் வரை இருந்தது. இது சராசரியாக 18 சதவீதம் ஆகும். இந்த வாரம் சோதனை நேர்மறை விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் சோதனை நேர்மறை விகிதம் 5 சதவீதம் அல்லது அதற்கு குறைவாகவே பதிவானது.

திருவள்ளூரில் சோதனை நேர்மறை விகிதம் 5 சதவீதமாகவும், மதுரையில் 4.4 சதவீதமாகவும், காஞ்சிபுரத்தில் 3.8 சதவீதமாகவும் இருந்தது. சென்னையில் 5 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக காணப்பட்டது.

தினசரி பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவே குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் 59 பேரும், கோவையில் 31 பேரும், கடலூரில் 22 பேரும் பலியானார்கள்.

14 மாவட்டங்களில் 10-க்கு கீழேயே இறப்புகள் பதிவாகி உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News