செய்திகள்
ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கும் பயணிகள்

Published On 2021-11-25 06:20 GMT   |   Update On 2021-11-25 06:20 GMT
தென்னக ரெயில்வே 39,822 பயணிகளிடம் முகக்கவசம் அணியாததற்கு அபராதமாக 1.98 கோடி வசூலித்து உள்ளது.
சென்னை:

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு கொல்லத்திற்கு விரைவு ரெயில் செல்கிறது.

ரெயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டவுடன் முகக்கவசத்தை கழற்றி பையில் வைத்திருத்தனர்.

பெட்டிக்குள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பயணிகள் நினைத்ததுபோல் இருந்தது. டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களும் ரெயில்வே பாதுகாப்பு போலீசும் முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள், ஆனால் தவறிழைக்கும் பயணிகளைக் கண்டிப்பதில்லை, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்பதை தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவித்து வருகிறார்கள்.



இயல்பு வாழ்க்கை திரும்பியதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாஸ்க் அணிவது கணிசமாக குறைந்து உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு வரை 70 சதவீதம் முதல் 80 சதவீதம் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முகக்கவசம் அணிந்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இது தலைகீழாக மாறிவிட்டது.

கொல்லத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலின் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பெரும்பாலான பயணிகள் முகக்கவசத்தை அணியவில்லை. பயணிகள் தொற்றுநோய் முடிந்து விட்டதைப் போல நடந்துகொண்டனர்.

பல முறை நடந்து சென்ற ரெயில்வே பணியாளர்களும் பயணிகளை முகக்கவசம் அணியச்சொல்லி வற்புறுத்தவும் இல்லை என்று பிரகாஷ் குமார் என்ற பயணி கூறினார்.

பயணிகள் 10 முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக முகக்கவசத்தை அணிவது சிரமமாக உள்ளது என்கிறார்கள். ஆனால் ரெயில் என்பது அலுவலக அறைகளை விட மிகவும் சிறிய மூடப்பட்ட இடம். எளிதில் கொரோனா பரவும் என்பதை உணரவில்லை.

தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மீறும் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலித்தும் வருகிறார்கள். தென்னக ரெயில்வே 39,822 பயணிகளிடம் முகக்கவசம் அணியாததற்கு அபராதமாக 1.98 கோடி வசூலித்து உள்ளது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் 147 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.


Tags:    

Similar News