செய்திகள்
மதுரையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் தக்காளி.

மதுரையில் தள்ளுவண்டிகளில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி

Published On 2021-11-26 07:18 GMT   |   Update On 2021-11-26 07:18 GMT
மதுரையில் தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தள்ளுவண்டிகளில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பாதிப்பு காரணமாக தக்காளி உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்தது.

இதனால் மார்க்கெட்டுகளில் தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட நாட்டுக்காய்கறிகள் 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.

குறிப்பாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால் கடும் கிராக்கி ஏற்பட்டதுடன் விலை கணிசமாக உயர்ந்தது. மொத்த விலை 80 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் 130 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதன் விலையும் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி அங்காடியில் 80 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டது. அதுபோல உழவர் சந்தையில் தக்காளி 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டது.

சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலம் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தக்காளியை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை மிகவும் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்றனர்.

மதுரை மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்தாலும் விவசாயிகளிடம் வியாபாரிகள் 25 முதல் 40 ரூபாய் வரை கொள்முதல் செய்வதாக தெரிகிறது.

இதனால் சில விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு தக்காளியை 50 ரூபாய் விலைக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். 

வியாபாரிகள் அதிகளவில் தக்காளியை கொள்முதல் செய்து பதுக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே இது தொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காய்கறி குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி தக்காளி பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வரத்து அதிகரித்துள்ளதால் மதுரையில் தக்காளி விலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News