செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

Published On 2020-10-14 08:02 GMT   |   Update On 2020-10-14 08:02 GMT
ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.65 லட்சம் சிக்கியது.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் (பாய்லர்) உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக மகேஷ்பாண்டி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சாலைகளில் உள்ள கொதிகலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அதற்கு உறுதி சான்று வழங்கப்படும்.

இந்த சான்று வாங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு வருவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீரென முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளி நபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-

இந்த சோதனை தொடர் புகாரின் பேரில் திடீரென நடத்தப்பட்டது. இதில் ரூ.1.65 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சில ஆயிரத்திற்கு மட்டும் உதவி இயக்குனர் கணக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை தவிர மீது உள்ள பணத்தை கைப்பற்றி உள்ளோம். கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றும் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

அதன்பிறகு அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News