செய்திகள்
கோப்புபடம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு - 7 ஆண்டுகளுக்கு பின் உடன்பாடு

Published On 2021-11-25 07:49 GMT   |   Update On 2021-11-25 07:49 GMT
கூலி உயர்வானது ஓராண்டுக்கு மட்டுமே என முடிவு செய்யப்பட்டது. விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு சம்மதித்தனர்.
திருப்பூர்:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், பல்லடம், மங்கலம், அவினாசி, கண் ணம்பாளையம், பெருமாநல்லூர், 63-வேலம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஊதிய உயர்வு கோரியதை தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி இருதரப்பினர் இடையே ஒருமித்த கருத்துகள் ஏற்படும் வகையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். 

திருப்பூர் - மாவட்ட கலெக்டர் வினீத், கோவை மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுவார்த்தையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் விரிவாக கேட்டு அறியப்பட்டு 2 மாவட்டங்களின் தொழில் அமைதி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 25-03-2014 அன்று அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வுடன் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், பிற ரகங்களுக்கு 20 சதவீதமும் வருகிற 1-ந் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூலி உயர்வானது ஓராண்டுக்கு மட்டுமே எனவும் முடிவு செய்யப்பட்டது. விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு சம்மதித்தனர்.  
Tags:    

Similar News