செய்திகள்
குற்றால அருவி

குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-09-14 08:44 GMT   |   Update On 2020-09-14 08:44 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணைப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நெல்லையில் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று அதிகபட்சமாக 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 83.10 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1055.44 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 804.75 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணையில் 92.52 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 67.97 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைப்பகுதியை தவிர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகின்றன.

புளியரை, கற்குடி, தவணை, மேக்கரை, அச்சம்புதூர், நெடுவயல், இலத்தூர், வள்ளம், பிரானூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.

இதனால் அப்பகுதியில் மக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் இருண்டே காணப்படுகிறது.

குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்கிறது. அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 21 மில்லிமீட்டரும், தென்காசியில் 13.40 மில்லிமீட்டரும், குண்டாறில் 7 மில்லிமீட்டரும், கருப்பாநதி, ராமநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

இதனால் அணைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News