செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கிற்கு அனைத்து கட்சி தலைவர்கள் ஆதரவு

Published On 2021-04-11 02:19 GMT   |   Update On 2021-04-11 02:19 GMT
மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
மும்பை:

மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசியமற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால் நிலைமையை சமாளிக்க முடியாவிட்டால் 15 நாட்கள் முதல் 3 வாரம் முழு ஊரடங்கு தேவைப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதை கருத்தை பேரிடர் நிவாரணத்துறை மந்திரி விஜய் வடேடிவாரும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார், காங்கிரசை சேர்ந்த மூத்த மந்திரி அசோக் சவான், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் எந்த ஒரு இறுதி முடிவுக்கும் வரவில்லை. ஆனால் கொரோனா சங்கிலி தொடரை உடைக்க ஊரடங்கு அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

மேலும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். இதுபற்றி அவர் பேசுகையில், "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாம் முழு ஊரடங்கு முடிவை எடுக்காவிட்டால், நாளை அந்த சூழ்நிலை தானாகவே ஏற்படும். தற்போதைய நிலவரம் மோசமாக உள்ளது. இது தொடர்பாக கொரோனா தடுப்பு பணிக்குழுவிடம் தொடர் ஆலோசனையில் உள்ளோம். ஒருபுறம் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது உள்ளது. இன்னொருபுறம் கொரோனாவை ஒடுக்க வேண்டியது உள்ளது. சில கடினமான முடிவுகள் மூலம் தான் இதில் நாம் வெற்றி பெற முடியும்" என்றார்.



இதையடுத்து பேசிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ஊரடங்கு அவசியம் தான், ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு முதலில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல்-மந்திரி எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்று நானா படோலே கூறினார். அதேநேரத்தில் கடந்த ஆண்டை போல மக்களை வறுத்தெடுக்கும் ஊரடங்கு இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்காததே, கொரோனா பரவலுக்கு காரணம் என்றும் நானா படோலே குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த மந்திரி அசோக் சவான், மக்களின் உயிரை காப்பாற்றவும், வாழ்வாதாரத்தை காக்கவும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஊரடங்கின் வடிவம், நோக்கம், காலம் ஆகியவை வரையறுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் கூறுகையில், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பணிக்குழுவிடம் முதல்-மந்திரி ஆலோசனை நடத்துவார் என்றார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து திங்கட்கிழமை (நாளை) தான் ஆலோசனை நடத்த இருப்பதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், "கடுமையான ஊரடங்கிற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆதரவாக உள்ளார். ஆனாலும் இறுதி முடிவுக்கு வரவில்லை" என்றார்.
Tags:    

Similar News