செய்திகள்
கோப்புப்படம்

2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல் - எதிர்ப்பு தெரிவித்து மந்திரி ராஜினாமா

Published On 2020-09-14 18:53 GMT   |   Update On 2020-09-14 18:53 GMT
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்:

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 24-வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், அங்கு 1,108 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனிடையே கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார். அதன்படி வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரேலில் கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு மே மாத தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் 2-வது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது. இதற்கிடையில் நாடு தழுவிய முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலின் வீட்டு வசதித் துறை மந்திரி யாகோவ் லிட்ஸ்மேன் பதவி விலகியுள்ளார்.

யூத பண்டிகை நாள்களுக்கு முன்னதாக இத்தகைய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவர், ஏற்கெனவே சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News