சிறப்புக் கட்டுரைகள்
குஷ்பு - பிரபு

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - திருச்செந்தூரில்...உச்சி வெயிலில் ...சுடு மணலில்...

Published On 2021-12-27 08:01 GMT   |   Update On 2021-12-27 08:01 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இப்பெல்லாம் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றால் நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் அறை... படப்பிடிப்பு தளத்தின் அருகிலேயே கேரவேன் வசதி... எல்லாம் வந்துவிட்டது.

ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசதியெல்லாம் கிடையாது. நினைத்தவுடன் தொடர்பு கொள்ள செல்போனும் கிடையாது.

ஒரு ஊருக்கு படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு வீடுகளை வாடகைக்கு எடுத்தி ருப்பார்கள். அங்குதான் தங்க வேண்டும். சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றால் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பு முழுவதையும் முடித்துக்கொண்டு தான் மொத்த குழுவினரும் சென்னை திரும்புவோம்.

சின்னதம்பி படம் வெளிவருவதற்கு முன்பே கிழக்குக்கரை படத்தில் ஒப்பந்தம் ஆகி இருந்தேன். ஆனால் கிழக்குக்கரை வெளிவருவதற்கு முன்பு சின்னதம்பி வெளிவந்து சக்கைப்போடு போட்டது.

மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களால் நானும், பிரபுவும் சூப்பர் ஜோடி என்று கொண்டாடப் பட்டோம். அதன்பிறகு எங்கு படப் பிடிப்புக்கு சென் றாலும் என்னை பார்க்க கூட்டம்... கூட்டம்...அவ் வளவு பெரிய கூட்டம் கூடும்.

கிழக்குக்கரை படப்பிடிப்பிற்காக குழுவினருடன் திருச் செந்தூர் சென்றோம். முதல் முறையாக திருச் செந்தூருக்கு சென்றதும் அப்போது தான்.

அந்த காலத்தில் திருச் செந்தூரில் நட்சத்திர வசதி கொண்ட ஓட்டல் எதுவும் இல்லை. அரசு தங்கும் விடுதி ஒன்று இருந்தது. அதில் தான் எல்லோரும் தங்கினோம்.

மறுநாள் காலை படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு அதிகாலையில் எழுந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நிர்மால்ய தரிசனம் செய்துவிட்டு படப் பிடிப்புக்கு புறப் பட்டோம்.

தொடர்ந்து பல நாட் கள் திருச்செந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. திருச்செந்தூர் அருகில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் முன்புதான் ‘செட்’ போடப்பட்டு இருந்தது.

படப்பிடிப்பு நடந்தது மே மாதம்! கோடை வெயில் காலம்! மதிய நேரத்தில் உச்சிவெயில் மண்டையை பிளக்கும்!

அப்படித்தான் ஒருநாள் மதிய வெயிலில் ஷுட்டிங். அந்த கோவில் பகுதியில் சிவந்த நிற மணல் குவிய லாக இருக்கும். அன்றைய தினம் எனக்கும், பிரபு சாருக்கும் இடையே டூயட் பாடல் காட்சி.

- என்று பாடியபடி பிரபுவை நோக்கி நான் ஓடி வரவேண்டும். அந்த காட்சியில் காலில் செருப் பும் இல்லாமல் நடிக்க வேண்டும். மணலில் அவ்வளவாக நான் நடந்து பழகியது இல்லை.

அதிலும் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு மணலில் ஓடிவந்த போது கால் தடுமாறி கீழே விழுந்து உருண்டுவிட்டேன். அப்போது எங்களை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி இருந்தார்கள்.

அவர்கள் நான் விழுந்ததை பார்த்து சிரித்துவிட்டனர். எனக்கும் கூச்சம்போல் ஆகிவிட்டது. சமாளித்தபடியே நானும் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டு சென்றுவிட்டேன். அதன் பிறகு அறைக்கு சென்று பார்த்த போது தான் புடவையிலும், உடலிலும் சிவப்பு மணல் நிறைய ஒட்டி இருந்தது.

அதன்பிறகு வேறு புடவை மாற்றிவிட்டு ஷுட்டிங் சென்றேன். திருச்செந்தூரில் தங்கியிருந்த போதுதான் ராம்குமார் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் இந்த காலத்தைப்போல் நேரடியாக பேசிவிட முடியாது.

நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் வரவேற்பு அறைக்கு போன் வந்திருக்கிறது. உடனே அங்கிருந்து ஒருவர் வந்து என்னிடம் தகவல் தெரிவித்தார். நான் ரி‌ஷப்சனில் சென்று காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் ராம்குமார் சார் அழைத்தார். அப்போது மன்னன் படம் எடுக்கப்போவது பற்றியும், அதை டைரக்ட் செய்வது பி.வாசு சார் என்றும் கூறினார். உடனே நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒத்துக்கொண்டேன்.

ஆனால் என்னுடைய நண்பர்கள் அந்த ரோல் உனக்கு வேண்டாம். ஏனென்றால் நீ இப்போது நம்பர் 1 நடிகையாக இருக்கிறாய்.

இந்த நேரத்தில் இரண்டாம் கதாநாயகி பாத்திரத்தில் நடித்தால் உனது இமேஜ் பாதிக்கும் என்றார்கள். அந்த படத்தில் விஜயசாந்தி கதாநாயகி. எனவே தான் எனது தோழிகள் அவ்வாறு கூறினார்கள்.

ஆனால் வாசு சார் இயக்கும் படத்தில் என்னுடைய பாத்திரம் நிச்சயம் பாராட்டும் படி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையில் தான் நானும் ஒத்துக் கொண்டேன்.

திருச்செந்தூரில் தங்கியிருந்த போது மறக்க முடியாத சம்பவம் நடந்தது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும் புதூரில் அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி வானொலியில் ஒலிபரப்பானது. மறு நிமிடமே எல்லா இடங்களும் நிசப்தமாகிவிட்டது.

நாங்கள் தங்கியிருந்த அந்த ஓட்டலை விட்டு 3 நாட்கள் வெளியே வரவே முடிய வில்லை. கடற்கரை பகுதி என்பதால் ராணுவ கட்டுப் பாட்டுக்குள் இருந்தது.

சாப்பாட்டிற்கு எதுவும் கிடைக்க வில்லை. தெரிந்தவர்கள் மூலம் பிரட் மற்றும் முட்டை ஆகியவற்றை வாங்கிவரச் செய்தார் கள். அதையும் காம் பவுண்டுக்கு வெளியே இருந்து தருவார்கள். நாங்கள் உள்ளே இருந்து வாங்குவோம்.

ஓட்டல் சமையல் அறைக்கு சென்று நானே பிரட் ஆம்லெட் தயார் செய்து எல்லோருக்கும் வழங்குவேன் வெறும் பிரட் ஆம்லெட், தண்ணீர் மற்றும் பிஸ்கெட் ஆகியவற்றையும் சாப்பிட்டு 3 நாட்களையும் நகர்த்தினோம்.

அதன்பிறகு திருச்செந்தூரில் ஷுட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பினோம். சென்னையில் மன்னன் படப்பிடிப்பு தொடங்கியது. முழுக்க முழுக்க எல்லா காட்சிகளும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது.

பாடல் காட்சிகள் மட்டும் ஊட்டியில் படமாக்கப்பட்டது. ரஜினி சாருடன் அந்த படத்தில் நடித்தது மற்றும் மீனா என்ற கதாபாத்திரத்தில் அழுத்தமான காட்சிகளில் நடித்தது எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது.

என்னுடைய தந்தையாக வி.கே.ராமசாமி சார் நடித்திருப்பார். அந்த படத்தில் மனோரம்மா ஆச்சி, கவுண்டமணி அண்ணன், விசு சார் ஆகியோரும் உண்டு.

இதே ஆண்டில் தான் (1991) இரவு சூரியன், பிரம்மா, விக்னேஷ்வர், நாட்டுக்கொரு நல்லவன் ஆகிய படங்களும் வெளிவந்தன. அந்த ஆண்டு வெளிவந்த இரவு சூரியன் படம் 1989-ல் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு தடங்கல்கள் காரணமாக இரண்டு ஆண்டுக்கு பிறகு வெளியிடப்பட்டது.

அதேபோல் பிரம்மா படத்தின் டைரக்டர் கே.சுரேஷ். எனது நெருங்கிய நண்பராக இருந்ததால் பெயர் சொல்லியே கூப்பிடுவேன். அதிகமாக பேசமாட்டான். ஆனால் ஒரு சைலண்டு கில்லர் மாதிரி பார்வையாலேயே தனது கோபத்தை காட்டுவான். நான் வாடா, போடா என்று தான் அழைப்பேன்.

அண்ணாமலை படப்பிடிப்பில் ஊட்டியில் சண்டை போட்டுக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிவிட்டேன். அதன்பிறகு நடந்தது என்ன...

(அடுத்த வாரம்)
Tags:    

Similar News