செய்திகள்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன்

திமுக இந்த முறையும் எதிர்க்கட்சியாகவே இருக்கும்- ஜி.கே.வாசன்

Published On 2021-03-19 07:49 GMT   |   Update On 2021-03-19 07:49 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெறுவார்கள் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று தனது கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்க நெறி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். வீட்டு வேலை செய்யும் பெண்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பஸ்சில் இலவச பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

நடைபாதையில் வசிப்பவர்களுக்கு இரவில் தங்க விடுதி அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய கல்லூரி அமைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் தேவையான உதவிகள் செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கை வெளியிட்டபின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கையும் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை யாரும் நம்பமாட்டார்கள்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். மக்கள் முழுமையான ஆதரவை அளிப்பார்கள்.

நடைபெறும் தேர்தலில் தி.மு.க. மீண்டும் 2-வது இடத்தைதான் பிடிக்கும். எதிர்கட்சியாகவே இருக்கும். இதுதவிர 3-வது, 4-வது அணிகளும் வெற்றி பெற முடியாது.

மக்கள் அ.தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே தி.மு.க.வின் பிரசாரமும் மற்ற கட்சிகளின் பிரசாரமும் எடுபடாது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெறுவார்கள். சட்டசபையில் எங்கள் குரல் எதிரொலிக்கும்.

நான் நாளை எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மயிலாடுதுறையில் தொடங்குகிறேன். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.

அடுத்த மாதம் 4-ந்தேதி வரை எனது சுற்றுப்பயணம் இருக்கும். அதன்பிறகு சென்னை திரும்புவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் முனைவர் பாட்ஷா, சக்திவடிவேல், கவிஞர் ரவிபாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகர், டி.ஆர். வெங்கடேஷ், அசோகன், மாவட்டத் தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார், அருண்குமார், நிர்வாகிகள் கே.டி.ஆர்.ரமேஷ், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News