செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்

Published On 2020-08-06 09:53 GMT   |   Update On 2020-08-06 09:53 GMT
தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் டி.வி. சேனல்கள் மூலமாக பாடம் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தையொட்டி பாதிப்பு கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும் சென்னையில் சில நாட்களாக அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் பள்ளிகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இருக்காது என்றும்,  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News