செய்திகள்
சிலிண்டர் விபத்து நடைபெற்ற இடம்

உ.பி. சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

Published On 2019-10-15 13:53 GMT   |   Update On 2019-10-15 13:53 GMT
உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து 13 பேர் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம், மாவ் மாவட்டம், முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை சமையல் செய்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள்
தெரிவித்தனர். 
 
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு தேவையான நிவாரணம், மருத்துவ உதவிகளை விரைந்து வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மாவ்  மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து 13 பேர் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கியான் பிரக்ச்ஷ் திரிபாதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News