செய்திகள்
கங்குலி

கொரோனா பரவலால் அச்சுறுத்தல்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் - கங்குலி உறுதி

Published On 2021-04-06 11:17 GMT   |   Update On 2021-04-06 11:17 GMT
கொரோனா தொற்று பரவலின் 2-வது அலை தீவிரத்தால் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.

புதுடெல்லி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

3 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு வளையத்தில் இருந்தபோதே வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.

ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா தொற்று பரவலின் 2-வது அலை தீவிரத்தால் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும்.

ஐ.பி.எல். போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News