லைஃப்ஸ்டைல்
ஆன்லைன் வகுப்பு

‘ஆன்-லைன்’ கல்வி வரமா? சாபமா?

Published On 2020-06-16 03:13 GMT   |   Update On 2020-06-16 03:13 GMT
‘ஆன்-லைன்‘ கல்வி என்ற புதிய டிஜிட்டல் கல்வி முறையுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ‘ஆன்-லைன்‘ கல்வியால் நமக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?. அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இப்புதிய கல்வி முறையினால் ஏற்பட போகும் நன்மைகள் அல்லது தீமைகள் என்னவென்று அலச போகிறோம்.
‘ஆன்-லைன்‘ கல்வி என்ற புதிய டிஜிட்டல் கல்வி முறையுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ‘ஆன்-லைன்‘ கல்வியால் நமக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?. அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இப்புதிய கல்வி முறையினால் ஏற்பட போகும் நன்மைகள் அல்லது தீமைகள் என்னவென்று அலச போகிறோம்.

நன்மைகள்

நன்மைகள் என்று எடுத்துக்கொண்டால், யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இருந்து இந்த கல்வியைப் பயில இயலும். தான் வேறு துறையை சார்ந்தவராக இருப்பினும், தான் விரும்பும் மற்றொரு துறையின் படிப்பையும் படிக்க இயலும்.

ஆனால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இது எப்படி இருக்கிறது?. அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இது எப்படி இருக்கிறது?. இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்?. இதை நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

வித்தியாசமான அனுபவம்

இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள், ஆசிரியர் முன் தன்னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள், இன்று நம் கணினியின் திரை முன் தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது.

இது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. மேலும், இவர்களுக்கு பள்ளி செல்லும் காலங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதற்கு தயாராகிறார்கள். ஆனால், இந்த ‘ஆன்-லைன்‘ கல்வியில் மேற்கூறியவற்றுக்கு எதற்கும் தேவை கிடையாது. உனக்கு ஒரு கணினி மட்டுமே தேவை. அதற்கு முன் இருக்க வேண்டியது அவசியமே தவிர வேறு எதுவும் அவசியமில்லை.

கவன சிதறல்

இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு முன்தயாரிப்பு, அதாவது பள்ளி செல்லும் பிரிபரேஷன் கிடையாது. பள்ளிச் சூழலில் தனக்கு அருகாமையில் தன்னுடைய தோழனோ, தோழியோ இருப்பார்கள். ஆனால், எதுவுமே இல்லாமல் வீட்டில் வித்தியாசமான சூழ்நிலையில், அம்மா, அப்பா அங்கே பேசிக்கொண்டிருப்பார்கள். சகோதரனோ, சகோதரியோ டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். தாத்தா, பாட்டி பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த சூழ்நிலையில்தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சூழலில் ‘ஆன்-லைன்’ மூலம் கல்வி கற்பது, பிள்ளைகளுக்கு சற்று கடினமாக இருக்கும். மேலும் கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சந்தேகத்தை போக்க...

கணினியின் திரையில் அவர்கள் முகமும், மற்ற தோழர்கள் முகமும் நேராக தெரிகிறது. அப்போது ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காட்டிலும், தோழனோ, தோழியோ என்ன செய்கிறார்கள்?, அவர்கள் வேறு எப்படி இருக்கிறார்கள்? என்பதையே மனம் கவனிக்க செல்கிறது.

பள்ளிக் கூடத்தில் உட்கார்ந்து இருக்கும்பொழுது, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடமும், தோழிகளிடமும் தன்னுடைய சந்தேகங்களை கேட்க வாய்ப்பிருக்கிறது ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.

கால அட்டவணை

இது பிள்ளைகளின் பிரச்சினை என்றால், ஆசிரியர்களின் பிரச்சினை என்ன?. பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் அந்த எட்டு மணி நேரம் ஒரு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு ஆசிரியை தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் அல்லது தகப்பனாகவும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதாவது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அதே நேரத்தில் ஆசிரியர் பணியையும் செய்ய வேண்டி இருக்கிறது.

அவர்களுக்கு கால அட்டவணை இல்லாததால் மனதில் குழப்பம் தோன்றுகிறது.

கண்காணிப்பு

இரண்டாவது அவர்களுக்கும் இந்த கணினி மூலம் பயிற்றுவிப்பது என்பது புதிதான ஒன்று. பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மற்ற பிள்ளைகள் எல்லோரும் தன்னை கவனிக்கிறார்களா? என்று நோட்டமிட முடியும். ஆன்-லைனில் அதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படி வாய்ப்பு இருப்பினும் அந்த ஆசிரியரால் ஏதும் செய்ய இயலாது.

இதைத் தாண்டி சில பெற்றோர்கள் வகுப்பில் பாடம் நடக்கும் பொழுது, தன் பிள்ளைகள் அதை கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக அந்த கணினியின் பின்புறமோ அல்லது அருகிலோ அமர்ந்திருக்கிறார்கள். இது ஆசிரியர்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனை ‘ஹெலிகாப்டர் பேரன்டிங்’ என்று கூறுவோம். அதாவது தன் பிள்ளைகளை சகஜமாக இருக்க விடாமல், எல்லா நேரமும் தங்கள் கண்காணிப்புக்கு கீழேயே வைத்திருப்பார்கள்.

பெற்றோர்கள்

தங்கள் பிள்ளை கல்வி கற்பது எப்படி? என்று பார்க்க வேண்டும். அதற்காக ஆன்-லைன் கல்வி நடக்கும் இடத்தில் நான் உட்கார்ந்து இருக்கிறேன். அல்லது ஆசிரியர் பயிற்றுவிப்பதை நானும் கற்றுக் கொண்டு என் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று இருப்பார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். இருப்பினும் இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதை இவர்கள் உணர வேண்டும். ஆசிரியர் ஆகட்டும், உங்கள் பிள்ளைகள் ஆகட்டும், நீங்கள் அங்கு இருப்பதை நிச்சயமாக ஒரு இடைஞ்சலாக தான் பார்ப்பார்கள்.

பெற்றோர்களும் இதை புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு அந்த நேரத்தில் தனிமையை கொடுத்து, பாடத்தில் கவனத்தை செலுத்த உதவ வேண்டும்.

தவறான வகையில் பயன்படுத்த...

ஆன்-லைன் கல்வி கற்கிறேன் என்ற பெயரில், சில பிள்ளைகள் தவறாக கணினியைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணித்து தடுக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் சரியான முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். காலை, மதியம், மாலையில் எத்தனை மணிக்கு வகுப்பு என்று மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் மூலம் ஆசிரியர் தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்தை கடந்தும் கணினி முன்பு மாணவர்கள் அமர்ந்து இருந்தால், அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

எப்படி ஹெலிகாப்டர் பேரன்டிங் தவறு என்று கூறுகிறோமோ, அதேபோல் நீ என்ன வேணாலும் செய், நான் சும்மா வேடிக்கை பார்க்கிறேன் என்பதும் தவறு.

தேர்வு

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்-லைனில் தேர்வு நடத்துகிறார்கள். இதை மாணவர்கள் எவ்வளவு நேர்மையாக செய்யப்போகிறார்கள் என்பது கேள்வி. இதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.

ஆன்-லைன் கல்வியில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறதா? என்று பயப்படவேண்டாம். இதில் நன்மைகளும் இருக்கிறது, சிறுசிறு தீமைகளும் இருக்கிறது. முதலாவதாக நாம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இரண்டாவதாக பிள்ளைகளை பெற்றோர்கள் சற்று கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆனால் எல்லா நேரமும் அவர்கள் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு பயமுறுத்த கூடாது. ஆசிரியர்களும் இந்தக் கல்வியை எதன் வழியாக போதித்தாலும் திறம்பட போதிப்பேன் என்ற எண்ணத்துடன் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

அவ்வாறு பயிற்றுவித்தால், ஆன்-லைனில் படித்தாலும் சரி, வகுப்பறையில் படித்தாலும் சரி, அதிக மதிப்பெண்கள் பெறுவது திண்ணம்.

-நப்பின்னை சேரன், உளவியல் வல்லுனர்,

அகில இந்திய உளவியல் சங்க செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பிரதிநிதி.
Tags:    

Similar News