செய்திகள்
கட்டுமான பணிகளை சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2021-10-16 08:18 GMT   |   Update On 2021-10-16 10:10 GMT
கேரளாவில் கொரோனா வைரஸ் உருமாறினாலும், அதன் குணத்தில் மாற்றம் இல்லை என்றும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கலெக்டர் அனீஷ் சேகர், டீன் ரத்னவேலு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் டவர் பிளாக் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்காலிக வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. சென்னை, கோவையில் மட்டும் 100-க்கும் மேல் தொற்று பதிவாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் உள்ளனர். ஒருசிலர் அரைகுறையாக அணிகிறார்கள். இது தவறு. பொதுமக்கள் முறைப்படி முக கவசம் அணிய வேண்டும்.

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 121.8 கோடி மதிப்பில் கட்டப்படும் 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அடங்கிய 7 மாடி புதிய மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடியும்.

இந்த ஆஸ்பத்திரிக்கு 173 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.112 கோடி செலவில் கட்டப்படும் கூடுதல் வளாகம் நடப்பாண்டு இறுதியில் முதல்வர் ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதிநிதிகள் வருகிற 20-ந்தேதி சென்னை வருகின்றனர். அப்போது அவர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக மரபியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் முதல் 50 மாதிரிகளில் 42 மாதிரி முடிவுகளில் அதிவேக டெல்டா வகை மாறுதல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.



கேரளாவில் கொரோனா வைரஸ் உருமாறினாலும், அதன் குணத்தில் மாற்றம் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

18 வயதுக்கு கீழ் உள்ள இளைய தலைமுறையினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் தொழில்நுட்ப கமிட்டி ஒப்புதல் வழங்கிய பிறகு, குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

கொரோனா நோய் பாதித்து உயிரிழந்த சுகாதார பணியாளர்களில் 34 பேருக்கு நிவாரண தொகை கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு பரிசீலனையில் உள்ளது.

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான படிவங்களை எளிமை படுத்தி உள்ளனர். அதன்படி கலெக்டர் மற்றும் இணை இயக்குநர் ஒப்புதல் இருந்தாலே அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன”

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News