செய்திகள்
நடிகை குஷ்பு

ஊனமுற்றோர் உரிமை சட்டத்தில் நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும் - 21 போலீஸ் நிலையங்களில் புகார்

Published On 2020-10-16 12:55 GMT   |   Update On 2020-10-16 12:55 GMT
நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்பதை ஏற்க இயலாது என்றும், ஊனமுற்றோர் உரிமை சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தில் 21 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்:

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை பற்றி அவர் ஒரு கருத்தை தெரிவித்தார். இது மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டார்.

இதற்கிடையே நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்டத்தில் 21 போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்தனர். இதில் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திலும், செயலாளர் பகத்சிங் பழனி நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், காங்கிரஸ் கட்சியை மூளைவளர்ச்சி இல்லாத கட்சி என்று குஷ்பு கூறியிருக்கிறார். இது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் கருத்தாகும். மாற்றுத்திறனாளிகளை பொதுஇடத்தில் அவமானப்படுத்தும் வகையில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் உண்டு. எனவே, குஷ்பு மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி விடுத்துள்ள அறிக்கையில், குஷ்பு பொதுவாக மன்னிப்பு கேட்பதை ஏற்க இயலாது. எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை, அவதூறு செய்யும் இதுபோன்ற பேச்சுகள் பிரபலங்களிடம் இருந்து வரக்கூடாது என்பதற்காகவே மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்யட்டும். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும், என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News