செய்திகள்
மீட்கப்பட்ட யானையின் தலை, வாய், தாடை எலும்புகளுடன், கைது செய்யப்பட்ட கார்த்திக்ராஜ் மற்றும் வீரபத்ரன்

யானையின் தந்தங்களை விற்ற 2 பேர் கைது

Published On 2019-10-21 18:21 GMT   |   Update On 2019-10-21 18:21 GMT
கோவை வனப்பகுதியில் இறந்து கிடந்த, யானையின் தந்தங்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை:

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அவற்றை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சென்னையை சேர்ந்த வனபுலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தெப்சிஸ் ஜனா, வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வன அலுவலர் செந்தில் ஆகியோரின் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் சென்னை வனபுலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இருந்தனர்.

தனிப்படையினர் கோவையை அடுத்த பாலமலை ஆதிவாசி கிராம பகுதியில் தீவிர விசாரணை செய்தனர். இதில் குஞ்சூர்பதியை சேர்ந்த கார்த்திக்ராஜ் (வயது 33), வீரபத்ரன் (20) ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு குஞ்சூர்பதி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானையின் தந்தங்களை வெட்டி விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்கு அவர்களின் நண்பர்கள் 2 பேர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

யானை தந்தங்களை விற்பனை செய்த பணத்தை பங்கு பிரித்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் வனத்துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து கார்த்திக்ராஜ் மற்றும் வீரபத்ரன் ஆகிய 2 பேரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உடந்தையாக இருந்த கார்த்திக்ராஜின் நண்பர்கள் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் யானை இறந்த இடத்திற்கு சென்று தனிப்படையினர் சோதனை செய்து, அங்கிருந்த யானையின் தலை, வாய், தாடை உள்ளிட்ட எலும்புகளை எடுத்து வந்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
Tags:    

Similar News