செய்திகள்
நடராஜன்

நடராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார் - ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பாராட்டு

Published On 2020-12-08 07:22 GMT   |   Update On 2020-12-08 07:22 GMT
நடராஜன் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாராட்டி உள்ளார்.

சிட்னி:

தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன். ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பிரபலம் ஆனார்.

ஐ.பி.எல். போட்டியில் நடராஜன் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அவரது பந்தில் திணறியதை நாம் பார்த்தோம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அவர் 2 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

இதேபோல 20 ஓவர் போட்டியில் முதல் 2 ஆட்டத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசினார். முதல் போட்டியில் 3 விக்கெட்டும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதோடு ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிக நேர்த்தியாக பந்துவீசினார். 2-வது போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்ட்யா பெருமிதத்துடன் பாராட்டினார்.


20 ஓவர் தொடரை கைப்பற்றியது தொடர்பாக நடராஜன் கூறும்போது, ‘இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதை என்னால் மறக்க முடியாது. இது என்றுமே சிறப்பானது’ என்றார்.

இந்தநிலையில் நடராஜனின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

நடராஜனின் பந்து வீசும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார். அவரது சிறப்பான ஆட்டம் தொடரும்.

ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவின் புதியகண்டு பிடிப்பு நடராஜன் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2015-16-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவும். 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் மயங்க் அகர்வாலும் புதிதாக சாதித்தார்கள். அந்த வரிசையில் தற்போதைய பயணத்தில் நடராஜனும் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News