செய்திகள்
மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை நிரம்பியது- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கூடுதல் பயிர் சாகுபடி

Published On 2021-01-07 08:04 GMT   |   Update On 2021-01-07 08:04 GMT
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கம் போல் நெல் சாகுபடி அனைத்து இடங்களிலும் நடக்கிறது. மானாவரி பயிர் சாகுபடி வழக்கத்தை விட அதிக பரப்பளவில் நடக்கிறது.
நெல்லை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் 5 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் அறிவுத்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக சிவகிரியில் 31 மில்லிமீட்டர் மழை பெய்தது. கனமழை காரணமாக சிவகிரி கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

கொடுமுடியாறு அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 3 மில்லிமீட்டர், ஆய்குடியில் 2.4 மில்லிமீட்டர், கருப்பாநதியில் 2 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் லேசாக சாரல் மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த பருவழையின்போது பாபநாசம், சேர்வலாறு அணை உள்பட 9 அணைகள் நிரம்பியது. அதிக கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, சிறிய அணையான நம்பியாறு அணை ஆகியவை மட்டும் நிரம்பாமல் இருந்தது.

118 அடி மொத்த நீர்மட்டம் உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 115 அடியை கடந்து நிரம்பும் நிலையை அடைந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 1107 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 10 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.35 அடியாக உயர்ந்தது.

இன்று பிற்பகல் இது 117 அடியானது. மணிமுத்தாறு அணை பாதுகாப்பை கருதி அணையில் 117 அடி வரையே நீரை தேக்குவார்கள். எனவே நாளை முதல் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே ஆற்றில் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பாபநாசம் அணை நீர்மட்டம் 142.10 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.37 அடியாகவும் உள்ளது.

இந்த வடகிழக்கு பருவமழையின்போது, சிறிய அணையான நம்பியாறு அணை மட்டும் இதுவரை நிரம்பவில்லை. 22.96 அடி மொத்த நீர்மட்டம் உயரம் கொண்ட இந்த அணையில் இன்று 10.62 அடி மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கம் போல் நெல் சாகுபடி அனைத்து இடங்களிலும் நடக்கிறது. மானாவரி பயிர் சாகுபடி வழக்கத்தை விட அதிக பரப்பளவில் நடக்கிறது.

இந்த ஆண்டு மானாவாரி நிலப்பகுதியில் ஓரளவு எதிர்பார்த்த மழை பெய்ததால் விளைச்சலும் அமோகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று எட்டயபுரத்தில் 8 மில்லிமீட்டர், சூரன்குடியில் 7 மில்லிமீட்டர், காடல்குடியில் 6 மில்லிமீட்டர், தூத்துக்குடியில் 2 மில்லிமீட்டர், விளாத்தி குளத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கடலோரப் பகுதியில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

Tags:    

Similar News