செய்திகள்
கூட்டுறவு வங்கியை திறக்கக் கோரி ரவணசமுத்திரத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

கூட்டுறவு வங்கியை திறக்கக்கோரி 3-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2020-10-16 11:03 GMT   |   Update On 2020-10-16 11:03 GMT
கடையம் அருகே கூட்டுறவு வங்கியை திறக்கக்கோரி நேற்று 3-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரத்திலுள்ள, கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி மற்றும் பயனாளிகளின் பணத்தை கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக, கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி மற்றும் உறுப்பினர்கள், தங்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலர் ஷாஜகான் மற்றும் எழுத்தர் முத்துசெல்வி ஆகியோர் மோசடி செய்து உள்ளதை கண்டுபிடித்தனர். அந்த 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 3-வது நாளாக வங்கி திறக்கப்படவில்லை. நேற்று காலையில் அடகு வைத்திருந்த நகைகளை திருப்புவதற்காக பொதுமக்கள் பலரும் கூட்டுறவு வங்கியின் முன்பு திரண்டு இருந்தனர். வங்கியை திறக்கக்கோரி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், ரவணசமுத்திரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் புகாரி மீராசாகிப், ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜ், சரசையன், காளையா மற்றும் தனிப்பிரிவு போலீசார் அருணாச்சலம், சேகர் ஆகியார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டுறவு வங்கியை திறக்கவேண்டும். அடகு நகைகளை திருப்ப வேண்டும், வங்கிக்கணக்கில் இருப்பை சரிபார்க்க வேண்டும். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். பகல் 12 மணியளவில் சேரை கூட்டுறவு சார்பதிவாளர் இசக்கியப்பன், கூட்டுறவு சார்பதிவு கள அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் வந்தபின் வங்கி திறக்கப்பட்டது. கணக்கு வைத்திருப்பவர்களின் இருப்பு சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிலரின் கணக்கில் பணம் இல்லாத நிலையும் கண்டறியப்பட்டது. கணக்குகளின் இருப்பு மற்றும் முழுமையான நிலை பற்றி நாளை(இன்று) தான் சொல்ல முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News