செய்திகள்
ஆரோக்கியம் தரும் செல்வக்கனி

இயற்கைத் தரும் இனிய வாழ்வு - ஆரோக்கியம் தரும் செல்வக்கனி

Published On 2021-10-29 12:19 GMT   |   Update On 2021-10-29 12:19 GMT
இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் ஆரோக்கியம் தரும் செல்வக்கனியான எலுமிச்சை குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நமது கைக்கு எட்டும் தொலைவில் இருக்கிற ஆரோக்கிய செல்வக்கனி எலுமிச்சை. சாலையோரத்தில் குடிசை போட்டு வசிக்கும் மக்களும் கூட கிடைக்கிற ஒரு சிறிய இடத்தில் ஒரு எலுமிச்சை மரத்தை நட்டு வைக்கிறார்கள். அதன் இலைகளின் வாசமே உயிர்ப்பு மிக்கது.  அதன் தடித்த இலைகள் பரப்புகிற பச்சையம் அந்தப் பகுதிக்கே குளிர்ச்சியூட்ட வல்லது.

எலுமிச்சை மரத்தில் முள் இருப்பதால் வீட்டுக்கு அருகில் இருந்தாலும் பாம்பு மரத்தில் ஏறுமோ என்ற பயம் தேவையில்லை. பாம்புகள் ஏறாது என்பதால் கருங்குருவி போன்ற பறவைச் சிற்றினங்கள் கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க ஏற்றதாக, பாதுகாப்பு மிக்கதாக எலுமிச்சை மரத்தைத் தேர்வு செய்கின்றன.  

நல்ல விதமான உயிர்ப்பெருக்கம் ஓரிடத்தில் இருந்தால் அந்த இடம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். இந்த அடிப்படை உண்மையை மனதின் ஆழத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.  பருவகால வேறுபாடின்றி ஆண்டு முழுதும் காய்த்துக் கனி தருவது எலுமிச்சை. கனியைப் பறிக்காவிட்டாலும் கனிந்து உதிர்ந்து உங்கள் காலடிக்கு உருண்டு வந்து என்னை உண்ணேன் என்று வருத்தி வேண்டுவது எலுமிச்சைக் கனி. அதிகபட்சம் இருபது உயரம் மட்டுமே வளரக் கூடியது. படர்ந்து புதர்ச் செடி போன்ற தன்மை உடைய எலுமிச்சைக் காய்த்துக் கனிந்ததும் தானாகவே கனியை உதிர்த்து விடும். பறிக்க வேண்டியதில்லை.

இன்றைக்கும் வெயில் காலத்தில் இரண்டு ரூபாய்க்கும், வெயில் குறைந்த காலத்தில் ஒரு பழம் ஐம்பது காசிற்கும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சை மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைப்பதாலேயே அதன் மகத்துவத்தை நாம் உணராமல் இருக்கிறோம்.
நமக்குத் தலைவலி, காய்ச்சல், வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு, சளி, இறுமல் எதற்கெடுத்தாலும் எலுமிச்சையை எடுத்துக் கொண்டால் போதும்.  உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொன்றிற்கும் எடுக்கும் முறைதான் வேறு. சளி இருக்கும் போது எலுமிச்சை சாற்றை எடுத்துக் கொண்டால் சளி அதிகரித்து விடாதா என்ற கேள்வி எழலாம். அதிகரிக்காது. சளி இருக்கும் போது எலுமிச்சை எடுத்துக் கொண்டால் உள்ளுக்குள் தேங்கியுள்ள சளி நீர்த்து வெளியேறவே செய்யும். எலுமிச்சையின் குளிர்ச்சி பற்றிய பயம் இருந்தால் வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றினைச் சில துளிகள் விட்டு அருந்தலாம்.

உலகம் முழுமைக்கும் பரவலாக அனைத்து நாடுகளிலும் அனைத்து இனத்தவராலும், அனைத்து விதமான சமையலிலும் பயன்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. வட கிழக்கு இந்தியப் பகுதியான அஸ்ஸாம், இன்றைய மியான்மர், சீனாவின் தென் மேற்குப் பகுதி ஆகிய மூன்றும் இணையும் பகுதியில் முதன் முதலாக விளைவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வருடங்களாகவே எலுமிச்சை பயன்பாட்டில் இருந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் குடியேற்றப் பகுதிகளில் தாமதமாகவே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிரிஸ்டோபர் கொலம்பஸ் தனது கடற் பயணத்தின் போது எலுமிச்சை விதைகளை எடுத்துச் சென்றுள்ளார்.  

நாம் சாதாரணமாக எலுமிச்சையின் புளிப்புச் சுவைக்காகவும் கெடாதிருக்கவும் எலுமிச்சைச் சாற்றினைக் கொண்டு சாதம் சமைக்கிறோம். மேற்குலகினர் அதன் வாசத்திற்காக கேக் மற்றும் இனிப்பு வகைகளிலும் மீன் மற்றும் இறைச்சி வகைகளிலும் எலுமிச்சையைச் சேர்த்துக் கொள்கின்றனர். எலுமிச்சையை மேற்குலகிற்குக் கொண்டு சென்றதில் எகிப்து, இரான் போன்ற அரபு நாடுகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆங்கிலத்தில் லெமன் என்றழைப்பதற்கு மூலச் சொல்லே  அரபு மொழியில் இருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள்.

லையீமூன் என்ற அரபுச் சொல்லில் இருந்து  பிரெஞ்சுச் சொல்லாகிய லைமன் என்ற சொல் உருவாகியது. அதில் இருந்து லெமன் என்று இன்று பரவலாக அழைக்கப்படும் சொல் தோன்றியிருக்கிறது. இந்த விளிப்புச் சொல்லானது வெறுமே மொழியாய்வு அல்ல. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் விளைவிக்கப்பட்ட எலுமிச்சை பிரெஞ்சு வழியாக இங்கிலாந்திற்கும் அங்கிருந்து கொலம்பஸ் வழியாக அமெரிக்க நாடுகளுக்கும் பின்னர் உலகம் முழுமைக்கும் பரவலாகி இருந்திருக்கிறது.
ஆனால் இந்தியாவில் அதன் பயணமும் பயன்பாடும் உலகப் பரவலாக்கத்தில் இருந்து வேறுபட்டது. தனித்துவமானது. அதன் வாசனை சுவாசத்தை இதமாக்குகிறது. அதே நேரத்தில் எலும்பு மஞ்ஜை வரைக்கும் ஊடுருவிப் பலன் தரவல்லதாக இருக்கிறது. அதனால் தான் எலுமிச்சை என்றார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.

மகிழ்ச்சி, துக்கம் எதுவானாலும் நமது நிகழ்வுகள் அனைத்திலும் எலுமிச்சை இடம் பெறுகிறது. பெரியவர்களை, மதிப்பிற்குரியவர்களைச் சந்திக்கும் பொழுது எலுமிச்சம் பழம் கொடுப்பது நம்மிடம் சர்வ இயல்பான ஒன்று. யாரேனும் ஒருவருக்கு ஒரு பொதியில் வைத்து ஏதாவது அளித்தால் பொதியின் உட்பொருளை எடுத்துக் கொண்டு வெறும் பொதியாகத் தராமல் உள்ளே எலுமிச்சம் பழத்தை இட்டுத் தருவது சிறந்த பண்பாக இன்றும் நம்மிடையே கடைப் பிடிக்கப்படுகிறது. மணமக்களுக்குக் கையில் கொடுப்பது எலுமிச்சம் பழம். இறந்தவர் கையிலும் கொடுக்கப்படுவது எலுமிச்சம் பழம்.

ஒருமுறை பணி நிமித்தம் ஒரு வேளாண் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் சேவை பெற்றவர் மிகுந்த மனநிறைவடைந்திருந்தார். உரிய தொகை போக வேறேதேனும் எனக்குக்  கொடுத்தால் தான் மனம் ஆறும் என்ற உணர்வில் இருந்தவர் கொஞ்சம் பொறுங்க என்றபடி தனது கொல்லைக்குச் சென்றவர் புடைத்த துணிப்பையோடு வந்தார். அத்தனையும் பொன்னிறமாக மின்னும் எலுமிச்சைப் பழங்கள். தனது உற்பத்திப் பொருளைப் பிறருக்குக் கொடுத்து மனநிறைவு அடைவதில் விவசாயிக்கு நிகராக இன்னொருவரைக் காண முடியாது இவ்வுலகில்.

துவண்டு போயுள்ள  ஆற்றலை உடனடியாக மீட்டுத் தரவல்லது எலுமிச்சைச் சாறு. அதனால் தான் உண்ணாநோன்பிருப்போர் அதனை  முடிக்கும் பொழுது எலுமிச்சைச் சாற்றினைக் கொடுத்து முடித்து வைக்கிறார்கள். முற்ற முழுதாகப் பழுப்பதற்கு முன்னுள்ள நிலையில் பழத்தின் சாற்றில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மிகச் சிறியளவில் மக்னீசியம், உயிர்ச் சத்து பி, சி, டி ஆகியவற்றோடு நார்ச்சத்தினையும் கணிசமாகக் கொண்டுள்ளது எலுமிச்சையின் சாறு.



மிகவும் மோசமான சைனடிஸிஸ் தொந்தரவு உள்ளவர்கள் தவிர மற்றனைவரும் எவ்விதமான நோய்க்கும் எடுக்கத் தகுதியானது எலுமிச்சைச் சாறு. அதன் குளிர்ச்சி தொல்லை தரும் என்று கருதுபவர்கள் அரை எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து சுமார் 200 மில்லி நீருடன் கலந்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் ஏலக்காய் அல்லது மிளகுத் தூள் சேர்த்து பழச்சாறு தயாரித்த பின்னர் சாறுள்ள பாத்திரத்தை வெந்நீரில் வைத்திருந்து குளிர்ச்சி நீக்கிப் பருகினால் அதன் குளிர்வு விளைவுகளைத் தவிர்த்து நன்மையைப் பெறலாம்.

தலைவலி, உடம்புவலி, திடீர் மயக்க உணர்வு, சோர்வு என எதற்கெடுத்தாலும் உடனடித் தீர்வுக்கு நீங்கள் எலுமிச்சைச் சாற்றினை வெந்நீரில் கலந்து குடித்தால் போதும், நெருக்கடியான நிலையில் இருந்து உடனே மீண்டு விடலாம். அதற்குப் பின்னர் அவரவருக்கு விருப்பமான மருத்துவத்தைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

ஆனால் உடல் இயல்பு நிலை சீராக இல்லை என்றால் எப்போதும் பதற்றப்படத் தேவையில்லை. கைவசம் எலுமிச்சம் பழம் இருந்தால்  போதும் வீட்டில் ஆம்புலேன்ஸை நிறுத்தி வைத்திருப்பதாகக் கருதிக் கொள்ளலாம். அந்தளவிற்கு ஆபத்பாந்தவன் எலுமிச்சை.
எல்லாவற்றிற்கும் பொதுவான தீர்வளிக்கக் கூடியது. திடீரென்று தோன்றும் சளிக் காய்ச்சல் என்று வைத்துக் கொள்வோம்.

சிறிதளவு பட்டை, நான்கைந்து கிராம்பு, ஐந்தாறு மிளகு அனைத்தையும் மொத்தமாக இடித்து நீரில் போட்டு உடன் அரை எலுமிச்சைக் காயை நான்கைந்து துண்டுகளாக வெட்டிப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து ஆற வைத்துக் குடித்தால் போதும். பத்தே நிமிடத்தில் உடல் முழுதும் வெப்பம் பரவி வியர்த்ததும் காய்ச்சலின் தீவிரம் தணியும்.

மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு இருந்தால் நல்ல சூடான வெந்நீரில் அப்போது தூளாக்கிய மிளகுத் தூளினைப் போட்டு ஆற்றி விட்டு அரை எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து மிதமான சூட்டில் நிதானமாக மிடறு மிடறாகக் குடித்தால் சுவாசப் பாதை உடனே சீராகும். அடுத்தடுத்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்திருந்தால் ஏதாவது சாப்பிட வேண்டும் போலத் தோன்றும். ஆனால் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு அதிகரிக்கவே செய்யும். அல்லது செரிக்காமல் உண்ட உணவு அப்படியே வெளியேறும். இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பமாக இருக்கும். இந்த நிலையில் உண்ணாமல் இருந்தால் நிறைய சோர்வாகவும் இருக்கும்.
இந்த நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த நீரில் பிழிந்து விட்டு மூன்று தேக்கரண்டி நாட்டுச் சக்கரையைப் போட்டுக் கலந்து விட்டு மூன்று ஏலக்காய்களைத் தட்டிப் போட்டு, கால் தேக்கரண்டி உப்பையும் போட்டு கலக்கி விட்டு ஐம்பது ஐம்பது மில்லியாக கால்மணி நேர இடைவெளியில் குடித்து வந்தால் சோர்வு நீங்குவதோடு துவண்டு போயிருந்த வயிறும், குடல் பாதையும் பலம் பெறும்.
எனவே வயிற்றுப் போக்கு நின்ற பிறகு உணவு உண்டால் செரிக்கக் கடினமாக இராது. செரிமானப் பாதையில் மாவுப் படலம் ஏற்பட்டு, வயிற்றில் அமிலம் மிகுந்திருந்தால் பசியும் இருக்கும் ஆனால் சாப்பிடவும் முடியாது. இப்படித் தன்மை உடையவர்கள் பொதுவாக தயிர்ச்சோறு அல்லது பால் சோறு அல்லது மோர்ச்சோறு உண்டால் இதமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்வது உண்டு.
தயிர்  பால் அனைத்தும் அமிலத் தன்மை உடையது என்பதை ஏனோ விவரம் அறிந்தவர்கள் கூட மறந்து விடுகிறார்கள். பால்  தயிர் அமிலம் என்பதோடு வயிற்றில் தேங்கி மந்தத் தன்மையும் உருவாக்கும்.

அசிடிட்டி என்றழைக்கப்படும் அமிலத் தேக்கம் உடையவர்களுக்கு திடீரென்று பசி தோன்றி உடல் நடுக்கமும், சோர்வும் ஏற்படும். இந்த நேரத்தில் உணவு உண்டால் சோர்வு நீங்கும் என்று புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இப்பசிச் சோர்வுடன் உண்ணும் போது ஆசுவாசம் ஏற்படுமே தவிர உண்ட உணவைச் செரிக்க உடலில் போதிய ஆற்றல் இருக்காது. எனவே தான் சரியாக உண்ண முடியாததோடு உண்டதும் தூங்க வேண்டும் போல் சோர்வும் தோன்றுகிறது. பலருக்குக் கடுமையாக வேர்க்கவும் செய்யும்.

இந்த நிலையில் உள்ளவர்கள் சுமார் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றினை 200 மில்லி வெந்நீரில் விட்டு அதில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள், ஒரு சிட்டிகை உப்பு, அரைத் தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை போட்டு ஆற்றி முன் சொன்னது போலவே மிடறு மிடறாகக் குடிக்க வேண்டும். உடல் ஆசுவாசம் அடைவதோடு  செரிமானத்திற்கும் தயாராகி விடும்.

பொதுவாக எலுமிச்சை புளிப்புத் தன்மை உடையது. சிட்ரஸ் அமிலம் என்றும் அரிக்கக் கூடியது என்றும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எலுமிச்சை நீரில் கலந்து நீர்க்கச் செய்வதால் ஆல்கலின் நிலையை அடைந்து விடுகிறது. எனவே எலுமிச்சைச் சாற்றினை நீர்த்த வடிவில் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. அல்லது எலுமிச்சங்காயில் இருந்து சாறு பிரித்தால் புளிப்பு மட்டுப்பட்டு அதில் கசப்பும், துவர்ப்பும் மிகுந்து விடும். இதை பயமின்றிப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சையானது அமிலத்திற்கு அமிலமாகவும் உயிர்ப்பிற்கு உயிர்ப்பாகவும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து உதவும்.
Tags:    

Similar News