செய்திகள்
கோப்புப்படம்

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2021-01-05 01:09 GMT   |   Update On 2021-01-05 01:09 GMT
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
புதுடெல்லி:

971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாராளுமன்ற கட்டிடமும் மற்றும் வளாகங்களை அமைக்கும் பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை வரும் 2022-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்தத் திட்டத்திற்காக பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறாமல் உள்ளது எனவும், எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது எனக்கோரி ராஜீவ் சூரி, உள்ளிட்ட சிலர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் விதமாக சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனையடுத்து இது தொடர்பாக அவசரமாக விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கில் தீர்ப்பு வரும் வரை கட்டுமான பணிகளையோ, கட்டிடம் இடிக்கும் பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது, ஆனால் ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம், என உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
Tags:    

Similar News