செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

தெருவிளக்குகளை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-10-30 18:15 GMT   |   Update On 2019-10-30 18:15 GMT
கோட்டப்பமந்து பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் தெருவிளக்குகளை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

ஊட்டி நகராட்சியில் 6-வது வார்டுக்கு உட்பட்டது மேல் கோடப்பமந்து பகுதியாகும். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி ஊட்டி-கோத்தகிரி நெடுஞ்சாலையையொட்டி அமைந்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்கிறவர்கள் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் இறங்கி செங்குத்தாக வீடுகளுக்கு நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனை சுற்றி புதர்கள் வளர்ந்து உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டும் சரிவர எரிவது இல்லை. அதன் காரணமாக வேலைக்கு சென்று வருகிறவர்கள் இரவு நேரத்தில் நடைபாதையில் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். குழி இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகிறார்கள். மேலும் அங்கு காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து மனுக்கள் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் தெருவிளக்குகளை சரிசெய்து தரக்கோரி ஊட்டி-கோத்தகிரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாணவர்கள் சிலர் சிறப்பு வகுப்பு முடிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அந்த சமயத்தில் நடைபாதை சரியில்லாததாலும், தெருவிளக்குகள் எரியாததாலும் காட்டெருமைகள் நடமாட்டத்துக்கு இடையே அவர்கள் அச்சத்துடன் வீட்டிற்கு வருகிறார்கள். நடைபாதை பழுதுடைந்து காணப்படுவதால், முதியோர்கள், நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, நடைபாதை, தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு, காட்டெருமைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News