பெண்கள் மருத்துவம்
எலும்புப்புரை நோய்

பெண்களை அதிகம் பாதிக்கும் எலும்புப்புரை நோய்- காரணம் என்ன?

Published On 2021-12-28 03:49 GMT   |   Update On 2021-12-28 09:21 GMT
ஆண்களும் பெண்களும் முப்பதாம் வயதில், எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர்.
முதிய வயதில், குறிப்பாக பெண்கள் குளியலறை அல்லது வேறு இடங்களில் வழுக்கி விழுந்து விலா எலும்பு பாதிக்கப்படுவது நாம் அடிக்கடி கேள்விப்படும் நிகழ்வு. இந்த நிகழ்வு விபத்தாக கருதப்பட்டு, எலும்பு முறிவுக்கான சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.

உண்மை என்னவென்றால், விபத்துகளாகக் கருதப்படும் இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றுக்கு எலும்புப்புரை நோயே காரணமாக இருக்கலாம். இதை கவனிக்காவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அந்த ‘விபத்து’ அடிக்கடி ஏற்படத் தொடங்குகிறது. சில நேரம் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.குழந்தை பருவத்தில் மென்மையாக இருந்து, வயது ஏற ஏற வலுப்பெற்று, பின் மீண்டும் வயது ஏற ஏற தன் வலுவை இழந்து, நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் இயல்பை எலும்புகள் கொண்டுள்ளன. எலும்புகள் நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் நிலையே எலும்புப்புரை.

இந்த நோய் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உணர்வதில்லை. இதுவே இந்த நோயை பெரும் ஆபத்தானதாக மாற்றி விடுகிறது. இது மனிதர்களைப் பலவீனப்படுத்தும் நோய்களில் முக்கியமானது. இந்த நோய் காரணமாக, முதுமையில், எலும்பு பலவீனமடைந்து எலும்பு முறியும் அபாயத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நேரம் இந்த எலும்பு முறிவால் இறப்புகூட நேரிடலாம். இது நாள்பட்ட நிலை என்பதால், இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படலாம்.

அதனால் வாழ்க்கைத்தரம் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். முன்கூட்டியே கவனிக்காவிட்டால் இந்த நோய்க்கான சிகிச்சை, பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கான மருத்துவச் செலவு சுமையாக மாறும். பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், மாதவிடாய் நின்ற 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்குப் பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.ஆண்களும் பெண்களும் முப்பதாம் வயதில், எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர். மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்பிருப்பதால், விரைவான எலும்பு திண்மை இழப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.

மாதவிடாய் நின்ற 5 முதல் 7 ஆண்டுகளில், எலும்புத் திண்மையில் தோராயமாக 12 சதவீதத்தை பெண்கள் இழக்கிறார்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களிடம் தொடங்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடே இதற்கு காரணம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News