செய்திகள்
ஜனாதிபதியுடன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதியிடம் மனு

Published On 2021-10-13 14:53 GMT   |   Update On 2021-10-13 14:53 GMT
மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் குழு தனது மனுவில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது காரி ஏறிய சம்பவத்திலும், அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்திலும் 8 பேர் பலியானார்கள்.

கார் ஏறிய சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 5 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.



இந்த சம்பவம் விஸ்வரூபமானதால் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


அவர் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில் லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் இன்று சந்தித்தனர். பிரியங்கா, குலாம்நபி ஆசாத், மல்லி கார்ஜூன கார்கே, ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரும் ஜனாதிபதியை சந்தித்தனர்.

காங்கிரஸ் குழு, ஜனாதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர். லக்கீம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

இந்த வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் குழு தனது மனுவில் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறும் போது, ‘‘லக்கீம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியிடம் நாங்கள் அனைத்து விவரங்களையும் கொடுத்து உள்ளோம். எங்களுக்கு 2 கோரிக்கைகள் உள்ளன. தற்போதுள்ள நீதிபதியைக் கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும். அல்லது அவரை நீக்க வேண்டும். இப்படி நிகழ்ந்தால்தான் நீதி கிடைக்கும்’’ என்றார்.

இதையும் படியுங்கள்... கதிசக்தி திட்டம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை மேலும் மேம்படுத்த உதவும்: பிரதமர் மோடி பேச்சு

Tags:    

Similar News