செய்திகள்
நாகூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

நாகூரில் ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா?

Published On 2021-06-10 18:17 GMT   |   Update On 2021-06-10 18:17 GMT
நாகூரில் ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாகூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நாகூர் போலீசார் வாஞ்சூர் சோதனை சாவடி, கொத்தவால் சாவடி, கிழக்கு கடற்கரை சாலை, நாகூர் - நாகை சாலை, நாகூர் - கங்களாஞ்சேரி சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாகூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நாகூர் பகுதியில் ஊரடங்கையொட்டி கடந்த மாதம் (மே) 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 260 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் தினந்தோறும் நாகூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று வாகனங்களை திரும்ப ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் போலீசார் உயர் அதிகாரிகளிடம் இருந்து மறு உத்தரவு வந்த பிறகு தான் மோட்டார் சைக்கிளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும் என கூறுகின்றனர். இதை கேட்டு வாகன உரிமையாளர்கள் சோகத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

வாகன பறிமுதல் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் தற்போது அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்வதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். பல நாட்களாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பழுதடைய வாய்ப்பு உள்ளது என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் திரும்ப ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News