செய்திகள்
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் எக்ஸ்ரே மையம்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் செயல்படாத எக்ஸ்ரே மையம்- நோயாளிகள் அவதி

Published On 2021-05-01 15:42 GMT   |   Update On 2021-05-01 15:42 GMT
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையம் செயல்படாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், சேது நாராயணபுரம், பட்டுப்பூச்சி, சுந்தரபாண்டியன் மகாராஜபுரம், தம்பிபட்டி, மேலக்கோபாலபுரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சொல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையின் மூலம் எண்ணற்ற நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் பணி அமர்த்தினால் எண்ணற்ற பேர் பயன்பெறுவர்.

மருத்துவர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள எக்ஸ்ரே மையத்தில் எக்ஸ்ரே எடுப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாளர் இல்லாததால் இந்த மையம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஆதலால் இங்கு வரும் நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே நிலையத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அத்துடன் போதுமான அளவு டாக்டர்கள், தூய்மைப்பணியாளர்கள், இரவு காவலாளி ஆகியோரை நியமித்து, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News