செய்திகள்
மாரிமுத்து சாலையில் விழுந்து கிடப்பதையும், அவர் விழுந்ததில் காரின் முன்பகுதி சேதமாகி இருப்பதையும் காணலாம்.

குரோம்பேட்டையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2021-04-16 19:23 GMT   |   Update On 2021-04-16 19:23 GMT
குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம்:

சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறமும் நேற்று மதியம் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் சாலையில் குதித்தார். அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்த அவர், அங்கிருந்து உருண்டு சாலையில் வந்து விழுந்தார்.

அப்போது சாலையை கடந்து செல்ல நின்ற சிலர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பின்னால் வந்த வாகனங்கள் அவர் மீது மோதாமல் இருக்க அந்த வாகனங்களை கை காட்டி நிறுத்தினர்.

வாலிபர் குதித்ததில் அந்த காரின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அந்த வாலிபரின் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 34) என்பது தெரியவந்தது.

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்வதற்காக விடுமுறை எடுத்துவிட்டு பிரியாணி கடையில் இருந்து சென்றுள்ளார். ஆனால் ஊருக்கு செல்லாமல் கடந்த 2 நாட்களாக தாம்பரம் சுற்று வட்டாரப்பகுதியில் அவர் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாரிமுத்து, குடும்ப தகராறு காரணமாக மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

அவர் தற்கொலைக்கு முயன்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News