லைஃப்ஸ்டைல்
மாறும் உணவு கலாசாரம்

மாறும் உணவு கலாசாரம்

Published On 2021-11-01 07:38 GMT   |   Update On 2021-11-01 07:38 GMT
நமது உணவு பழக்க வழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. இன்று இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விச் என்பது சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.
மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்றாலோ அல்லது ஒரு சின்ன விருந்து என்றாலோ உடனடியாக பீட்சா, பர்க்கர் என கிளம்பி விடுகிறது ஒரு பட்டாளம். யோசித்து பாருங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பான நிலைமையை. இட்லி, தோசை என்றாலே அது தீபாவளிக்கும் பொங்கலுக்குமான சிறப்பு உணவாக அந்த நாட்கள் இருந்தன. இன்று இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விச் என்பது சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.

இந்த உணவு கலாசார மாற்றம் என்பது சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. இதற்கு பின்னாலும் சர்வதேச பொருளாதார தொடர்புகள் இருப்பதுதான் உண்மை. நமது உணவு பழக்க வழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. 1991-ம் ஆண்டுகளிலிருந்து விறு விறுவென இந்தியா உள்வாங்கிக் கொண்ட புதிய பொருளாதார கொள்கைகளின் உப விளைவுகளில் ஒன்றுதான் இந்த உணவு கலாசார மாற்றம்.

இந்த ஆண்டு தாராளமயமாக்கலின் 30-ம் ஆண்டு. சர்வதேச அளவில் திறந்த சந்தை பொருளாதார நாடாக இந்தியா இன்னும் முழுமையாக திறந்துவிடப்பட வில்லை என்றாலும் அதில் 50 சதவீத அளவையாவது இப்போது எட்டி விட்டது. இந்த 50 சதவீதம் சந்தை சூழ்நிலையிலேயே இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் காணாமல் போய்விட்டன என்கிறது ஆய்வுகள்.

100 சதவீதம் திறந்த பொருளாதார சந்தை நாடாக இந்தியா மாறும் காலகட்டங்களில் உணவு தானிய உற்பத்தியை நம்பி இருப்பவர்களின் நிலைமை என்னாவது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் இளைய தலைமுறையினர் சப்பாத்தி சாப்பிடுவதைவிட பீட்சா சாப்பிடுவது அதிகரித்துள்ளது. அதாவது நமது உணவு பழக்கம் எந்த அளவுக்கு வேறுபட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த ஆய்வில் பல உணவுப் பொருட்களின் நுகர்வு விகிதத்தையும் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 17 முக்கிய உணவு பொருட்கள் அதிகமாக நுகரப்பட்டு வருகிறது என்கிறது. குறிப்பாக முட்டையும், ஆல்கஹாலும் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

இந்த உணவு மாற்றத்தில் சிறப்புமிக்க பல்வேறு சிறுதானியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தற்போதைய வளர்ச்சியிலிருந்து இருமடங்காக இருக்கும் என்கிற புள்ளிவிவரம் மட்டுமே சிறுதானிய உற்பத்தியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இளையோர்களின் விருப்ப உணவாக உள்ள நூடுல்ஸ்க்கு இந்தியாவில் சுமார் ரூ.6,000 கோடிக்கு சந்தை வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியர்களின் சராசரி உணவு நுகர்வு விகிதம் அதிகரித்துள்ளது. உதாரணமாக முட்டையின் நுகர்வை பார்க்கலாம் 1961-ம் ஆண்டை விட 2013-ம் ஆண்டுகளில் இதன் நுகர்வு விகிதம் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தானியம் மற்றும் பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ளது. 1991-க்கும் 2013-க்கும் இடையில் விலங்குகளின் கொழுப்பு வகைகளும் நுகர்வில் முன்னிலையில் உள்ளன.

குறிப்பாக ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளின் நுகர்வு குறைந்து கோழி இறைச்சியின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் ஓட்டல்களின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. 34 சதவீதம் மக்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வெளியில் உணவருந்துகின்றனர். 12 சதவீதம் பேர் தினசரி ஓட்டல்களுக்குச் செல்கின்றனர். ஓட்டல்களுக்குச் செல்வோரில் இரவு நேர உணவுக்கு 60 சதவீதம் பேர் செல்கின்றனர். தனிக்குடும்பங்களின் முதன்மையான தேர்வாக ஓட்டல்கள் உருவாகிவிட்டன.
Tags:    

Similar News