செய்திகள்
கோப்புபடம்

இந்தியாவில் அடுத்த மாத இறுதியில் கொரோனா 3-ம் அலை தாக்கும் - மருத்துவர்கள் எச்சரிக்கை

Published On 2021-07-16 08:23 GMT   |   Update On 2021-07-16 08:23 GMT
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்துள்ளதால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது ஆல்பா வகை கொரோனா வைரஸ் பொதுமக்களை தாக்கியது.

ஊரடங்கு மற்றும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா தாக்கம் குறையத்தொடங்கியது.

இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியது. மே மாதம் மத்தியில் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. அரசு எடுத்த ஊரடங்கு மற்றும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்றின் 2-வது அலை குறையத் தொடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா 3-ம் அலை பரவத் தொடங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறியதாவது:-

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்துள்ளதால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்து வந்தது.


இந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

சீராக குறைந்து வந்த பாதிப்பு 10 வாரங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஆகியவையே இதற்கு காரணமாகும்.

டெல்டா வகை கொரோனா இப்போது 111-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வகை கொரோனா விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. தற்போது தடுப்பூசி விநியோகத்திலும் உயிர் காக்கும் மருந்துகள் பயன்பாட்டிலும் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

பல நாடுகளுக்கு இதுவரை எந்த வித தடுப்பூசியும் கிடைக்கவில்லை. வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த பட்சம் 10 சதவீத மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீதம் பேருக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் கொரோனா 3-ம் அலை தாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) தொற்று நோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா கூறுகையில், ‘இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஆகஸ்டு மாத இறுதியில் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

நோய் பரவலை அதிகரிக்க செய்யக்கூடிய வகையிலான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் 3-ம் அலையின் பாதிப்பை குறைப்பதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரண்தீப் குலேரியா கூறிய தாவது:-

நோய் எதிர்ப்பு திறன் குறைதல், அதிக பரவல் திறன் கொண்ட கொரோனா வைரஸ் உருமாற்றம் பெறுதல், பொது முடக்க தளர்வுகள் ஆகியவையே கொரோனா 3-ம் அலை உருவாவதற்கான காரணங்கள் ஆகும். கட்டுப் பாடுகளை முழுமையாக தளர்வு செய்வது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா 2-வது அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டால் கொரோனா பரவலும் குறைவாக காணப்படும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மூலம் கொரோனா 3-ம் அலையின் பாதிப்பை குறைக்க முடியும்.

சில நாடுகளில் கொரோனா 3-ம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்ட போதிலும் மருத்துவ மனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பதே இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...ஹரியானா: ரேசன் கடையில் உணவு தானியங்கள் வழங்கும் தானியங்கி மெஷின் அறிமுகம்

Tags:    

Similar News