செய்திகள்
ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் போராட்டம்

Published On 2019-11-29 08:09 GMT   |   Update On 2019-11-29 08:09 GMT
ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் மெய்யூர் கிராமத்தில் வசித்து வரும் பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர், மாளந்தார் கிராமங்களில் நத்தம் நிலத்தில் நீண்ட காலம் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் மெய்யூர் கிராமத்தில் வசித்து வரும் பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கட்சியின் வட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் வாசுதேவன், அருள், வேலன், கண்ணியப்பன், ரமேஷ், குமார், மணிவண்ணன், சேகர், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் கோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசாணை 318-ன் படி ஊத்துக்கோட்டை வட்டத்தில் அடங்கிய மேற்கூறப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விலையில்லா இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் வட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, பாலாஜி, கங்காதரன், ரமா, பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News