ஆன்மிகம்
திருச்செங்கோடு எட்டிமடைபுதூரில் வள்ளி, தேவசேனா உடனுறை கல்யாணமுருகர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.

திருச்செங்கோடு, கந்தம்பாளையம், ராசிபுரம் கோவில்களில் திருவிழா

Published On 2021-01-30 07:28 GMT   |   Update On 2021-01-30 07:28 GMT
திருச்செங்கோடு எட்டிமடைபுதூரில் வள்ளி, தேவசேனா உடனுறை கல்யாணமுருகர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிள்ளையாரை வணங்கி, கும்மியடித்து, பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் வள்ளி, தேவசேனா உடனுறை கல்யாணமுருகர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வள்ளி, தேவசேனா, முருகன் சாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு உற்சவர் ஊர்வலம் நடந்தது. பின்னர் இடும்பன் பூஜையும் நடைபெற்றது. திருச்செங்கோடு அருகே ஒக்கிலிப்பட்டி சன்னபாறை ஸ்ரீஆதிநாராயண பெருமாள் நகரில் தைப்பூசத்தையொட்டி முதலாம் ஆண்டு நிலா பிள்ளையார் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிள்ளையாரை வணங்கி, கும்மியடித்து, பூஜைகள் செய்து வழிபட்டனர்.

நல்லூரில் உள்ள மகா கணபதி, மகா மாரியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிலா பிள்ளையார் நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து மாவிளக்கு எடுத்தனர். பின்னர் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மகா கணபதி, மகா மாரியம்மன் சாமிகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மைதானத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ராசிபுரம் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் 45-வது தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி வள்ளலார் உருவப்படத்துடன் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி அகவல் பாராயணம் மற்றும் கொடியேற்றம் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மேலும் வள்ளலார் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, திருவருட்பா பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வள்ளலார் ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News