செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 மாதத்தில் 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-07-18 10:26 GMT   |   Update On 2021-07-18 10:26 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோனிராஜ் மகன் அலெக்சாண்டர் (வயது26). இவர் அடிதடி, சண்டை உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் மீது எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி, சண்டை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
 
இது போன்று தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்டு வரும் அலெக்சாண்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அலெக்சாண்டரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையொட்டி நேற்று அலெக்சாண்டரை கைது செய்த போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் கூறுகையில், இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீதும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்ட 5  பேர்  மீதும், கஞ்சா குற்ற வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் போக்சோ குற்ற வழக்கில் ஒருவர் என இந்த வருடம் மொத்தம் 15  பேர் மீது ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News