உள்ளூர் செய்திகள்
மழையில் நனைந்தபடி செல்லும் மக்கள்

சென்னை - புறநகர் பகுதிகளில் ‘திடீர்’ மழை

Published On 2022-01-17 06:56 GMT   |   Update On 2022-01-17 06:56 GMT
சென்னையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. இந்த ஆண்டு இயல்பை விட அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை அதிகமாக பெய்தது. டிசம்பர் இறுதியில் சென்னையில் கனமழை பெய்து வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது.

2 நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது. எதிர்பாராமல் பெய்த இந்த திடீர் மழை பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் வெளிவர 2 வாரங்கள் நீடித்தன.

வடகிழக்கு பருவமழை பல மாநிலங்களில் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் விலகவில்லை. பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்ட போதிலும், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்கிறது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசாக தூறிய மழை காலை 8 மணியளவில் கனமழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. ஒருசில நிமிடங்கள் வரையே இந்த மழை நீடித்தது.

பின்னர் லேசாக மழை தூறி வருகிறது. காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

ஆவடி, அம்பத்தூர், புழல், செங்குன்றம், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, புழுதிவாக்கம் மதுரவாயல் உள்ளிட்ட பல இடங்களில் லேசான மழை பெய்தது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டிலும் மழை பெய்தது.

சென்னையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஜனவரி 2-வது வாரத்தில் பருவமழை முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் மழை நீடித்து வருகிறது.

சென்னையில் வானம் மேகமூட்டம் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று சேர்வலாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது. அங்கு மாலையில் 1 மில்லி மீ தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளான கருப்பாநதி, அடவிநயினார் பகுதிகளில் மட்டும் நேற்று மழை பெய்தது.

கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கோத்தகிரி பஜார் பகுதி, கிராமப்புற பகுதிகள், கொடநாடு, சோலூர்மட்டம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் மழை பெய்தது.

இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையும் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News