ஆன்மிகம்
முத்தாரம்மன்

முத்தான வாழ்வருளும் முத்தாரம்மன்

Published On 2019-12-08 10:45 GMT   |   Update On 2019-12-08 10:45 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

அகத்திய முனிவரை அவமதித்த காரணத்தால், அவரின் சாபத்திற்கு ஆளானார் வரமுனி என்ற முனிவர். அந்த சாபத்தால் அவர், எருமை தலையும், மனித உடலும் கொண்ட அசுரனாக வடிவெடுத்தார். சாபத்தைக் கேட்டு அதிர்ந்த வரமுனி விமோசனம் கேட்க, “பார்வதி தேவியால் அழியும்போது உனக்கு முக்தி கிடைக்கும்” என்று அருளினார்.

இதையடுத்து மகிஷாசுரனாக உருவெடுத்த அந்த முனிவர், பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்கள் தந்த கர்வத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனது தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். உடனே பார்வதியை அழைத்த சிவபெருமான், தேவர்களுக்கு உதவி செய்யும்படி பணித்தார்.

ஈசனின் உத்தரவை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி, தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள். அம்மன் தவம் செய்த ஒன்பது நாட்களும் தசரா திருவிழாவாக திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த 10-ம் நாள் விஜயதசமியில் இந்த விழா சிறப்புற நிறைவுறும்.

தசரா விழா புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் தசரா விழா சிறப்பாக நடைபெறும் இடமாக குலசேகரப்பட்டினம் திகழ்கிறது. இந்த தலத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

இத்தல ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரிசூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.

முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் உகந்தவையாகும். ஆலய மகா மண்டபத்தில் கருப்பசாமி, பேச்சியம்மன், பைரவர் சன்னிதிகள் உள்ளன. பேய், பிசாசு, காத்து கருப்புகளை நம்மை அண்ட விடாது கருப்பசாமி காத்தருள்வார். மூன்று வயதாகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை இந்த தலத்திற்கு அழைத்து வந்து பேச்சியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

இங்குள்ள பைரவரை அஷ்டமி நாட்களில் மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சித்து, உளுந்துவடை மாலை சாற்றி வழிபட்டால் வறுமை அகலும். வளங்கள் பெருகும். கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம்.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். குறிப்பாக அம்மை நோய். உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்கு உடனடி பலன் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.

புரட்டாசி மாத அமாவாசை அடுத்து வரும் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள்.

பத்தாம் நாள் விஜயதசமி அன்று இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சூரசம்ஹாரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சூலத்துக்கும் பூஜைகள் நடைபெறும். இரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக எழுந்தருள்வாள். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ய, சுற்றிலும் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும். தொடர்ந்து முத்தாரம்மன் திருத்தேர் மற்றும் பூச்சப்பரத்தில் வீதி உலா வருவாள். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர்.

காலையில் வீதி உலா புறப்பட்ட முத்தாரம்மன் மாலையில் கோவிலை அடைந்ததும் கொடி இறக்கம் நடைபெறும். குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களும் தங்கள் முகங்களில் அரிதாரம் பூசி இருப்பார்கள். கரடி, குரங்கு, பிச்சைக்காரன், செல்வந்தன், போலீஸ், கிருஷ்ணர், முருகர், ராமர், சிவன், விஷ்ணு, காளி என பலப்பல வேடங்கள் புனைந்து விழாவில் கலந்துகொள்வார்கள்.

விரதம் இருந்தே இந்த வேடங்களை பூணுவார்கள். தீராத நோய், கடன், வறுமை, பகை, செய்வினை, தீவினை, கண் திருஷ்டி அகலவும், திருமணம், வேலைவாய்ப்பு, செல்வம் தடை நீங்கவும் என பல காரணங்களுக்காக முத்தாரம்மனை பல்வேறு வேடமிட்டு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.
Tags:    

Similar News