ஆன்மிகம்
சந்திரன், சூரியன்

தேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்

Published On 2019-09-13 11:07 GMT   |   Update On 2019-09-13 11:07 GMT
திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதி தேவதைகளை வழிபட்டால் கடுமையான பாதிப்புக்களில் இருந்து விடுபடலாம்.
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.’ ஆனால் எல்லா பாக்கியங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவீதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைதான். சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதையே இங்கே பார்க்கப் போகிறோம்.

இங்கே நாம் விதி, மதி, கதி என்ற மூன்றையும் பார்க்க வேண்டும். விதி என்பது லக்னம், மதி என்பது சந்திரன், கதி என்பது சூரியனைக் குறிக்கும். ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலையெழுத்தாக அமைகிறது. 5-ம் இடம் எனும் பூர்வ பூண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை, மதியால் எப்படி சாதகமாக மாற்றி அமைப்பது என்பதை காட்டுகிறது. 5-ம் இடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால், மதியால் மாற்றியமைக்கப்பட்டதை, 9-ம் இடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது. வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்களைக் கூட மிகப் பெரிய சாதனை மனிதராக மாற்றுவது இத்தகைய அமைப்புதான்.

ஆக, உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உயிர்ப்புடன் இருக்க ஆதாரமாக இருப்பது விதி (லக்னம்), சூரியன் (கதி), சந்திரன் (மதி) என்பது புலனாகிறது. சூரிய, சந்திரர்களின் சக்தியானது 12 ராசிகளுக்கும் தடையின்றி கிடைத்தால் மட்டுமே அனைத்து ராசி, கிரகங்களும் செயல்படும்.

தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட இந்த காலத்தில், சிறு வயது குழந்தைகள் கூட தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை கூறி விடுவார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு அவர்களின் பிறந்த திதி என்பது தெரியாமலே இருக்கிறது. சந்திரன் பூமியை சுற்றி வரும் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதி. இந்த திதிகளில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டுமே சூரிய, சந்திரர்களின் சக்தியானது பரிபூரணமாக கிடைக்கும். மற்ற திதிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராசிகளுக்கு சூரிய- சந்திரர்களது கிரக சக்தி மறைவதால் சிறப்பான பல பலன்களை அடைவதில் தடை, தாமதம் ஏற்படும்.

சாதாரண மனிதர் முதல் சாதனை மனிதர்கள் வரை, பிரச்சினை ஒன்று வந்தால் வழிபாட்டால் அதை சரி செய்துவிட முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் எத்தகைய வழிபாட்டால் அதை சரி செய்வது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிவதில்லை. திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதி தேவதைகளை வழிபட்டால் கடுமையான பாதிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

திதிகளை வளர்பிறை, தேய்பிறை என பிரிக்கலாம். அமாவாசை முதல் பவுர்ணமி வரை ‘வளர்பிறை’, பிரதமை முதல் அமாவாசை வரை ‘தேய்பிறை’ காலமாகும். வளர்பிறைக்கு 15 திதிகளும், தேய்பிறைக்கு 15 திதிகளும் உண்டு. வளர்பிறையில் பிறந்தவர்கள் வளர்பிறை திதி தேவதைகளையும், தேய் பிறையில் பிறந்தவர்கள் தேய்பிறை திதி தேவதைகளையும் தங்களின் பிறந்த திதி நாளில் வழிபாடு செய்ய வேண்டும்.

வளர்பிறை

1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா

2. துதியை - பிரம்மா

3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா

4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி - திரிபுரசுந்தரி

6. சஷ்டி - செவ்வாய்

7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்

8. அஷ்டமி - காலபைரவர்

9. நவமி - சரஸ்வதி

10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்

11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி - மகா விஷ்ணு

13. திரயோதசி - மன்மதன்

14. சதுர்த்தசி - காளி

15. பவுர்ணமி - லலிதாம்பிகை

தேய்பிறை

1. பிரதமை - துர்க்கை

2. துவதியை - வாயு

3. திரிதியை - அக்னி

4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி - நாகதேவதை

6. சஷ்டி - முருகன்

7. சப்தமி - சூரியன்

8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் பைரவர்

9. நவமி - சரஸ்வதி

10. தசமி - எமன்

11. ஏகாதசி - மகாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி - சுக்ரன்

13. திரயோதசி - நந்தி

14. சதுர்த்தசி - ருத்ரர்

15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News