செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2020-11-29 22:05 GMT   |   Update On 2020-11-29 22:05 GMT
ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை, அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது. அப்படித் தடை உள்ள நிலையில் தி.மு.க. பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான்.

கொரோனா காலத்திலும் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போது வீட்டிலேயே முடங்கி இருந்துவிட்டு தற்போது தி.மு.க.வினர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருவது அரசியல் ஆதாயத்திற்காவே. அது மக்கள் மத்தியில் எடுபடாது. தேர்தலை எப்போது, எப்படி சந்திப்பது என்பது எங்களுக்கு தெரியும்.

திரையரங்குகள் திறக்கப்படாத நேரத்தில் சூரரை போற்று போன்ற படங்கள் ஒடிடியில் திரையிடப்பட்டது. தற்போது திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதனை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

ரஜினிகாந்த் தனது மன்றத்தினரை சந்திப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினி தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதில் சிறப்பம்சம் ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது.

அ.தி.மு.க. மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். எப்போதும் கட்டுக்கோப்பாக தான் உள்ளோம். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அ.தி.மு.க.வில் இருக்காது என தெரிவித்தார்.
Tags:    

Similar News