தொழில்நுட்பம்
கூகுள் நெஸ்ட் ஹப்

கூகுள் நிறுவனத்தின் நெஸ்ட் ஹப் அறிமுகம்

Published On 2019-09-07 07:28 GMT   |   Update On 2019-09-07 07:28 GMT
கூகுள் நிறுவனம் இந்திய சந்தையில் நெஸ்ட் ஹப் எனும் ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளேயை அறிமுகம் செய்துள்ளது.
தேடுபொறி நிறுவனமான கூகுள் மின்னணு கருவிகளையும் தயாரித்து வருகிறது. மிகவும் விரும்பத்தக்க பிராண்டாக இந்நிறுவனத் தயாரிப்புகள் திகழ்கின்றன. வித்தியாசமான, மக்களுக்கு மிகவும் அவசியமான மின்னணு கருவிகளை தயாரித்து அளிப்பதில் இந்நிறுவனம் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் நெஸ்ட் ஹப் எனும் ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளேயை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9,999. இதில் நிறுவனத்தின் தயாரிப்பான வாய்ஸ் அசிஸ்டென்ட் இணைப்பு வசதி உள்ளது. இது பிளிப்கார்ட் இணையதளத்திலும், குரோமா, டாடா கிளிக், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட விற்பனையகங்களிலும் கிடைக்கும். இரண்டு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.

இதில் கூகுள் மேப்ஸ், யூ-டியூப் இணைப்பு வசதிகள் உள்ளன. வானிலை மற்றும் கூகுள் போட்டோ ஆப் (செயலி) உள்ளது. உபயோகிப்பாளர்கள் இதை தனி அறையில் ஸ்பீக்கராக பயன்படுத்த விரும்புவர். அதற்காகவே இதில் கேமரா வசதி செய்யப்படவில்லை என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் டிஸ்பிளே திரையை புகைப்பட பிரேம் போலவும் பயன்படுத்த முடியும்.

பிடித்தமான போட்டோவை ஆல்பம் பகுதியில் வைத்தால் நீங்கள் அடுத்து மாற்றும் வரை அது திரையில் அழகாக ஒளிரும். வீடுகளில் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை வைத்து அழகு பார்க்கலாம். இதில் உள்ள விளக்கு வெளிச்சமானது, அறையின் வெளிச்சத்துக்கு ஏற்ப மாறுபடும். இரவு நேரத்தில் அணைந்து நேரத்தை மட்டும் காட்டும். இதனால் உங்கள் தூக்கம் கெடாது. கூகுள் ஆல்பத்தில் நீங்கள் பதிவேற்றியுள்ள புகைப்படங்களை நீங்கள் பார்க்க விரும்பினால் இதன் மூலம் பார்க்கலாம். குரல் வழி மூலம் தேவையான புகைப்படங்களை நீங்கள் பார்க்க முடியும். அதேபோல கூகுள் பிளே மூலம் புகைப்பட தொகுப்புகளை தொடர்ந்து திரையில் காண்பிக்குமாறு கூறலாம். இதில் டிஜிட்டல் பில்டர் உள்ளது. அதாவது வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு இடையூறாக அழைப்புகள் ஏதும் மேற்கொள்ளாதபடி பிளாக் செய்ய முடியும்.

மின்னணு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து பிராண்ட் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். அதாவது வீட்டில் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதன செயல்பாட்டையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதேபோல உங்களது உறவினர், நண்பர்களுக்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கலாம்.

அதேபோல இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களுடன் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளவும் இது உதவும். விதவிதமாக சமைக்க ரெசிபிகளையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 7 அங்குல திரையுடன் மேல் பகுதியில் சில சென்சார்களுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது நெஸ்ட் ஹப். அறிமுக சலுகையாக ரூ.1,799 மதிப்புடைய எம்.ஐ. பாதுகாப்பு கேமராவையும் கூகுள் நிறுவனம் அளிக்கிறது.

Tags:    

Similar News